Tamil Nadu Weather Alert: ஒருபக்கம் வெயில்.. மறுபக்கம் மழை.. தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கான வானிலை நிலவரம் இதோ!
Tamil Nadu weather today: தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கான விரிவான வானிலை நிலவரம் இதோ!
சென்னை, செப்.06: தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் சுமார் 7.6 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாகவே தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
இதையும் படிக்க: பழங்குடிகளிடம் ரூ.1 கோடி லஞ்சம்.. சிக்கிய 6 வனத்துறை ஊழியர்களுக்கு செக்.. திருவண்ணாமலையில் அதிரடி நடவடிக்கை..!
இன்று மழைக்கு வாய்ப்பு:
அந்தவகையில், இன்று (செப்.06) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
வரும் நாட்களில் மழை நிலவரம்:
தொடர்ந்து, (செப்.07, 08) நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து, செப்.9, 10ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், செப்.11-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேர நிலை:
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்தும், ஏனைய பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது. ஈரோடு, கரூர் பரமத்தி, பாளையங்கோட்டை, சேலம், திருச்சி, வேலூர் ஆகிய பகுதிகளில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் பதிவானது.
அதிகபட்ச வெப்பநிலை நிலவரம்:
உள் தமிழகத்தில் இன்று முதல் செப்.9ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதேசமயம், கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வழக்கத்தை ஒட்டி இருக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தவெக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இல்லை.. திட்டவட்டமாக தெரிவித்த மாநில செயலர் மு. வீரபாண்டியன்!
சென்னையில் வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.