உள்ளாட்சித் தேர்தல் முதல் பொதுக்குழு வரை.. அதிமுக மா.செக்களுடன் இபிஎஸ் ஆலோசனை.. மூத்த நிர்வாகிகள் புறக்கணிப்பு..
ADMK District Secretaries Meeting: சென்னை எம்.ஜி.ஆர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. புதிய நிர்வாகிகள் நியமனத்திற்குப் பின் நடைபெறும் இக்கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல், செயற்குழு-பொதுக்குழு கூட்டம் மற்றும் உட்கட்சி விவகாரங்கள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை, செப்.06: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், அதிமுகவில் பல்வேறு முக்கிய உட்கட்சி விவகாரங்கள் மற்றும் அரசியல் மாற்றங்கள் தொடர்ச்சியாகப் பேசுபொருளாகி வருகின்றன. குறிப்பாக, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது அக்கட்சியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செயல்பட்டு வந்த நிலையில், கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில் 26 மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டுப் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், அதிமுக தலைமை அலுவலகத்தில் புதிய நிர்வாகிகளுடனான இரண்டாவது மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று கூடியுள்ளது.
இதையும் படிக்க: ரேஷன் கார்டு விண்ணப்பங்களில் புதிய மாற்றம்.. கவலையே வேண்டாம்.. இனி அலையத் தேவையில்லை!!
கூட்டத்தில் விவாதிக்கப்படும் முக்கிய விஷயங்கள்:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுகவில் மொத்தம் உள்ள 85 மாவட்ட செயலாளர் பொறுப்புகளில், கே.பி. கந்தன், கடம்பூர் ராஜு, ஆர்.எஸ். ராஜேஷ் போன்ற முக்கிய நிர்வாகிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால் காலியாக உள்ள இடங்களுக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது. மேலும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது, கட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சிகளை விமரிசையாக நடத்துவது மற்றும் கட்சியின் புதிய நிர்வாகிகளுக்கு ‘புதிய ரத்தப் பாய்ச்சலாக’ உற்சாகமூட்டி அடுத்தகட்டப் பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
ஆண்டுக்கு 2 செயற்குழு கூட்டம்:
கட்சி விதிகளின்படி ஆண்டிற்கு இரண்டு செயற்குழு மற்றும் ஒரு பொதுக்குழு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். கடந்த காலத்தில் தேர்தல் மற்றும் உட்கட்சிப் பிரச்சனைகள் காரணமாகச் செயற்குழு கூட்டம் தள்ளிப்போன நிலையில், வரும் செப்டம்பர் மாத இறுதி அல்லது அக்டோபர் மாதத் தொடக்கத்தில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களைக் கூட்டுவது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க: பழங்குடிகளிடம் ரூ.1 கோடி லஞ்சம்.. சிக்கிய 6 வனத்துறை ஊழியர்களுக்கு செக்.. திருவண்ணாமலையில் அதிரடி நடவடிக்கை..!
மூத்த நிர்வாகிகளின் புறக்கணிப்பு:
இதனிடையே, எடப்பாடி பழனிசாமியுடன் மாறுபட்ட கருத்து கொண்டுள்ள சி.வி.சண்முகம் தலைமையிலான அணியில் உள்ள எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் போன்ற மூத்த தலைவர்கள் மாவட்ட செயலாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டிருந்த போதிலும், துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் உள்ளதால் இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், கடந்த கூட்டத்தைப் போலவே இன்றைய கூட்டத்தையும் அவர்கள் புறக்கணித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையிலேயே இக்கூட்டம் கூட்டப்பட்டிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.