சிறுமி மாயமான வழக்கில் புதிய தகவல் – புதிய கோணத்தில் விசாரணை
Villupuram Missing Girl Case : விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மாயமான 7 வயதுச் சிறுமி காணாமல் போன அன்றிரவு, அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் தனியாக வசிக்கும் மூதாட்டி ஒருவரின் வீட்டுக் கதவை அடையாளம் தெரியாத நபர்கள் தட்டியதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம், அக்டோபர் 29 : விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மாயமான 7 வயதுச் சிறுமி குறித்து, 18 நாட்களாகியும் இதுவரை எந்த தகவலும் கிடைக்காமல் சிபிசிஐடி (CBCID) காவல்துறையினர் திணறி வருகின்றனர். இந்த நிலையில், சிறுமி காணாமல் போன அன்றிரவு, அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் தனியாக வசிக்கும் மூதாட்டி ஒருவரின் வீட்டுக் கதவை அடையாளம் தெரியாத நபர்கள் தட்டியதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அந்த மூதாட்டியிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டி அளித்த தகவலின் பேரில் புதிய கோணத்தில் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச சேர்ந்த வடிவேலு மற்றும் பவானி தம்பதிக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் விஜயலட்சுமி சென்னையில் தங்கி நர்சிங் டிப்ளமோ படித்து வருகிறார். இளைய மகள் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இதையும் படிக்க : வீட்டில் இருந்த பெண் கொடூர கொலை.. நகைக்காக தங்கை மகன் வெறிச்செயல்.. பகீர் சம்பவம்!




இந்த நிலையில் கடந்த அக்டோபர் 11, 2026 அன்று ஹேமலதாவுக்குப் பிறந்தநாள் என்பதால் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று, தனது பிறந்தநாளுக்கு மகிழ்ச்சியுடன் அழைத்திருக்கிறார். அன்று மாலை நண்பர்கள், உறவினர்களுடன் பிறந்தநாளைக் கொண்டாடிய சிறுமி, இரவு உணவுக்குப் பிறகு தாயுடன் வீட்டில் உறங்கினார்.இதனையடுத்து அடுத்த நாளான அக்டோபர் 12, 2026 அன்று காலை சிறுமியின் தாய் கண்விழித்தபோது, அருகில் உறங்கிய மகளைக் காணாததால் பவானி அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து உறவினர்கள் அந்த கிராமம் முழுவதும் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.
இதனையடுத்து தந்தை வடிவேலு அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அடுத்தடுத்த நாட்களில் தகவல் கிடைக்காததால், நான்கு டிஎஸ்பிக்கள் தலைமையில் சுமார் 200 போலீஸார் அடங்கிய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கோட்டக்குப்பம் பகுதி மீனவர்களின் உதவியுடனும், ட்ரோன்கள் மூலமும், சுற்றுவட்டாரக் கிணறுகள், நீர்நிலைகளில் தேடுதல் நடைபெற்றது.
இதனையடுத்து மோப்ப நாய்கள் உதவியுடன் கிராமத்தின் அனைத்து வீடுகளும் சோதனையிடப்பட்டன. சிறுமியின் பெற்றோர், உறவினர்கள், அப்பகுதியில் உள்ள சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளிகள் என அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தகவல் தெரிந்தவர்கள் தொடர்புகொள்ளக் கைப்பேசி எண்களும் வெளியிடப்பட்டன. ஆனாலும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.
சிபிசிஐடிக்கு மாற்றம்
காவல்துறை மெத்தனமாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி போராட்டம் அறிவித்த திமுக, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தியது. இதையடுத்து, அக்டோபர் 21 இரவு, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். மறுநாளே, சிபிசிஐடி எஸ்.பி. ஜவஹர், டிஎஸ்பி கீதா, ஆய்வாளர் ரேவதி உள்ளிட்டோர் ஆலம்பூண்டி கிராமத்துக்குச் சென்று, சிறுமியின் பெற்றோர் உள்பட ஏற்கெனவே விசாரிக்கப்பட்ட அனைவரிடமும் மீண்டும் விசாரணையைத் தொடங்கினர். ஏற்கெனவே விசாரிக்கப்பட்ட சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளி ஒருவரைச் சிறுமி படித்த பள்ளி, சுடுகாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதிலும் எந்தத் தகவலும் கிடைக்காததால் அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையும் படிக்க : முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு – நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
இந்நிலையில், சிறுமி காணாமல் போன அன்றிரவு, அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் தனியாக வசிக்கும் மூதாட்டி ஒருவரின் வீட்டுக் கதவை அடையாளம் தெரியாத சிலர் தட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த நபர்கள் யார், சிறுமி மாயமானதற்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில், அந்த மூதாட்டியிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.