AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

செஞ்சி 7 வயது சிறுமி மாயமான வழக்கு: 2-வது நாளாக பெற்றோரிடம் சிபிசிஐடி விசாரணை! 6 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தநாள் கொண்டாடியது ஏன்?

Gingee 7 Year Girl Missing Case: சிறுமி காணாமல் போனதற்குப் பின்னால் பணம் தொடர்பான காரணங்கள் இருக்கிறதா, சிறுமியைப் பணத்திற்காக யாரிடமாவது ஒப்படைத்தார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  அதேபோல், இந்தச் சம்பவத்தில் சிறுமியின் தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகியோருக்குத் தொடர்பு உள்ளதா அல்லது அவர்களுக்குத் தெரியாமல் சம்பவம் நடைபெற்றதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

செஞ்சி 7 வயது சிறுமி மாயமான வழக்கு: 2-வது நாளாக பெற்றோரிடம் சிபிசிஐடி விசாரணை! 6 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தநாள் கொண்டாடியது ஏன்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Oct 2026 16:50 PM IST

 அக்டோபர் 25, 2026: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஏழு வயது சிறுமி காணாமல் போன வழக்கில், சிபிசிஐடி அதிகாரிகள் இரண்டாவது நாளாக சிறுமியின் தாய், தந்தையிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளாகச் சிறுமியின் பிறந்தநாள் கொண்டாடப்படாத நிலையில், இந்த ஆண்டு மட்டும் ஏன் கொண்டாடப்பட்டது என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 11-ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய சிறுமி மாயம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி குளக்கரை தெருவில் வசித்து வருபவர் வடிவேலன். இவரது மனைவி பவானி. இந்தத் தம்பதியினரின் இரண்டாவது குழந்தையான ஏழு வயது சிறுமி, கடந்த 11-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். வீட்டில் பெற்றோருடன் பிறந்தநாள் கொண்டாடிய சிறுமி, இரவில் உறங்கச் சென்றுள்ளார். மறுநாள் அதிகாலை 5 மணியளவில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது, சிறுமியைக் காணவில்லை

இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரித்துப் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், சத்தியமங்கலம் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.

மேலும் படிக்க: “குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்?” – கனிமொழி எம்.பி. கடும் விமர்சனம்!

10 தனிப்படைகள் அமைத்துத் தீவிர தேடுதல்

சிறுமியைக் கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினர் 10 தனிப்படைகளை அமைத்துத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சிறுமியின் வீடு மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அங்குலம் அங்குலமாகத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும், சுமார் 10 நாட்களாகத் தேடியும் சிறுமி குறித்த முக்கியத் தடயங்கள் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

6 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தநாள் கொண்டாடியது ஏன்?

வழக்கை ஏற்றுக்கொண்ட சிபிசிஐடி அதிகாரிகள், சிறுமியின் வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். சிபிசிஐடி எஸ்.பி. ஜவகர், டி.எஸ்.பி. கீதா, ஆய்வாளர் ரேவதி உள்ளிட்ட அதிகாரிகள் சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்டமாகச் சிறுமியின் தாயார் பவானியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது நாளாகத் தாய், தந்தை இருவரிடமும் சேர்த்து விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் படிக்க: வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 5 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை எச்சரிக்கை..

அப்போது, கடந்த ஆறு ஆண்டுகளாகச் சிறுமியின் பிறந்தநாள் கொண்டாடப்படாத நிலையில், இந்த ஆண்டு மட்டும் ஏன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொண்டாட்டத்திற்குப் பின்னால் ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிகாலை 3 மணிக்கு சிறுமி அழுததாகத் தகவல்

சிறுமி காணாமல் போன சம்பவத்தில், அவர் கடைசியாக எப்போது, யாரால் பார்க்கப்பட்டார் என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அதிகாலை 3 மணியளவில் சிறுமி அழும் சத்தம் கேட்டதாக எதிர்வீட்டில் வசிக்கும் மஞ்சுளா தெரிவித்த தகவலும் விசாரணையில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலின் அடிப்படையில், அந்த நேரத்தில் வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும், சிறுமி வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கான வழிகள், வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் சம்பவம் நடைபெற்றிருக்கக்கூடிய சூழல்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

பணத்திற்காகச் சிறுமி விற்கப்பட்டாரா?

சிறுமி காணாமல் போனதற்குப் பின்னால் பணம் தொடர்பான காரணங்கள் இருக்கிறதா, சிறுமியைப் பணத்திற்காக யாரிடமாவது ஒப்படைத்தார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  அதேபோல், இந்தச் சம்பவத்தில் சிறுமியின் தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகியோருக்குத் தொடர்பு உள்ளதா அல்லது அவர்களுக்குத் தெரியாமல் சம்பவம் நடைபெற்றதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை சிறுமி குறித்த உறுதியான தகவல் கிடைக்காத நிலையில், குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறுமியின் குடும்பத்தினருக்குச் சம்பவத்தில் தொடர்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே, அடுத்தகட்ட விசாரணையை முன்னெடுக்க முடியும் என்ற கோணத்திலும் அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

 

Follow Us