பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களைப் பகிர்ந்ததாகக் குற்றச்சாட்டு: ஆரணி அருகே ஓய்வுபெற்ற ராணுவ கேப்டன் கைது
Military Secrets Sharing Case : இந்திய ராணுவ ரகசியங்களைப் பாகிஸ்தானுக்குப் (Pakistan) பகிர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அக்டோபர் 24, 2026 நேற்று கைது செய்யப்பட்டார். வெளிநாட்டை சேர்ந்த பெண்ணிடம் வாட்ஸ்அப் மூலம் தகவல்களைப் பகிர்ந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேலூர், அக்டோபர் 25 : இந்திய ராணுவ ரகசியங்களைப் பாகிஸ்தானுக்குப் (Pakistan) பகிர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அக்டோபர் 24, 2026 நேற்று கைது செய்யப்பட்டார். மத்திய உளவுப் பிரிவினர் பல நாள்களாகக் கண்காணித்து வந்த நிலையில், தமிழகக் காவல்துறையின் உதவியுடன் அவர் பிடிபட்டார். வேலூரில் பாபுவை ரகசியமாக கண்காணித்த மத்திய அரசின் புலனாய்வு பிரிவினர் அவரை கைது செய்துள்ளனர்.
ஆரணி அருகே ஓய்வுபெற்ற ராணுவ கேப்டன் கைது
கைது செய்யப்பட்ட பாபு கடந்த 1994 ஆம ஆண்டு வரை இந்திய ராணுவத்தில் பீரங்கிப் படைப் பிரிவில் கேப்டனாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுகாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. கண்ணமங்கலம் அருகே வேலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்வல்லம் கிராமத்தில், சொகுசு பங்களா கட்டி அவர் வசித்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : நடப்பாண்டில் 50,000 விவசாய மின் இணைப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்னென்ன?




ராணுவத்தில் பணியாற்றியபோது, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பாபுவுக்கு ரகசியத் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் மூலம் இந்திய ராணுவ ரகசியங்களைப் பாகிஸ்தான் ராணுவத்துக்குத் தெரிவித்ததாகவும், ஓய்வுபெற்ற பிறகும் அந்தத் தொடர்பைத் தொடர்ந்து வந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மூலம் அறிமுகமாகி நெருக்கமாகப் பழகிய ஒரு வெளிநாட்டுப் பெண்ணிடம் அவர் ரகசியங்களைப் பகிர்ந்ததாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேசப் போலீஸ் தகவல்
ஓய்வுக்குப் பிறகும் பாபு ராணுவ ரகசியங்களைப் பகிர்ந்து வருவதாகச் சர்வதேசப் போலீஸார் அளித்த தகவலின் அடிப்படையில், மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணையைத் தொடங்கினர். பாபு கீழ்வல்லம் பகுதியில் வசிப்பதைக் கண்டறிந்த அவர்கள், கடந்த 4 நாட்களாக வேலூர் மாவட்டம் பாகாயத்தில் தங்கி, அவர் குறித்த தகவல்களைத் திரட்டினர். அதன் பின்னர், ரகசியங்களைப் பகிர்ந்தது பாபுதான் என்பதை உறுதி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க : உருவானது அர்னாப் புயல்.. தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை? – டெல்டா வெதர்மேன் சொன்ன விளக்கம்
இதையடுத்து, தமிழகக் காவல்துறையின் ஒத்துழைப்புடன், கணியம்பாடி காவல் ஆய்வாளர் புனிதா தலைமையிலான போலீஸார், ஆரணி அருகே காட்டுகாநல்லூர் பகுதியில் இருந்த பாபுவைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அரசு ரகசியங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் (Official Secrets Act) கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பின்னர், அவர் ரகசிய இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மத்திய புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். தற்போது பாபு எந்தெந்த ரகசியங்களைப் பகிர்ந்தார், இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து மத்திய புலனாய்வு அமைப்பினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.