‘சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்’ – செஃப் தாமுவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்
சமையல் கலையில் கின்னஸ் சாதனை படைத்துள்ள தாமு, உடல் நலக்குறைவு காரணமாக அக்டோபர் 25, 2026 இன்று காலமானார். இந்த நிலையில் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகச் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் என முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு உடல் நலக்குறைவு காரணமாக அக்டோபர் 25, 2026 இன்று காலமானார். அவருக்கு வயது 72. 24 மணி நேரம் தொட்ரந்து சமைந்து கின்னஸ் (Guinness Record) சாதனை படைத்துள்ள தாமு, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வென்ற முதல் தென்னிந்திய சமையல் கலைஞர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இந்த நிலையில் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், அக்டோபர் 25, 2026 இன்று காலையில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
செஃப் தாமுவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்
இந்நிலையில் தமிழக முதல்வர் விஜய் தனது பதிவில் செஃப் தாமுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில் “பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு என்று அழைக்கப்படும் கே.தாமோதரனின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. தனது சமையல் திறமையாலும், தனித்துவமான அணுகுமுறையாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகச் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.




2010 ஆம் ஆண்டில் தனிநபரின் மிக நீண்ட சமையல் மாரத்தான் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்ததோடு, பத்மஸ்ரீ விருதும் பெற்ற பெருமைக்குரியவர். அவரது மறைவு சமையல் கலைத் துறைக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், சமையல் கலையை நேசிக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளார் டிடிவி தினகரன் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “புகழ்பெற்ற சமையல் கலை நிபுணரும், அக்கலையின் பெருமையை உலகறியச் செய்து கின்னஸ் சாதனை படைத்தவருமான பத்மஸ்ரீ தாமு உடல்நலக் குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
சமையலை ஒரு தொழிலாகக் கருதாமல், அதனை ஓர் உன்னதக் கலையாக உயர்த்திக் காட்டிய தாமுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக சமையல் கலை நிபுணர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா
இறைவனின் திருவடிநிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய்யின் இரங்கல் பதிவு
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு என்று அழைக்கப்படும் திரு.கே.தாமோதரன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
தனது சமையல் திறமையாலும், தனித்துவமான அணுகுமுறையாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகச் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். 2010 ஆம் ஆண்டில் தனிநபரின் மிக நீண்ட சமையல் மாரத்தான் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்ததோடு, பத்மஸ்ரீ விருதும் பெற்ற பெருமைக்குரியவர். அவரது மறைவு சமையல் கலைத் துறைக்குப் பேரிழப்பாகும்.
அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், சமையல் கலையை நேசிக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 25, 2026
ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இந்த துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்திய சமையல் நிபுணர் என்ற பெருமையையும் பெற்றார். கடந்த 2010 ஆம் ஆண்டு 24 மணி நேரம், 30 நிமிடங்கள், 12 விநாடிகள் தொடர்ந்து சமையல் செய்து 617 வகையான உணவுகளைத் தயாரித்தார். இதன் மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்தது அவரது வாழ்க்கையின் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்று இளம் தலைமுறையினரிடமும் பிரபலமானார். சமையல் நிகழ்ச்சிகள் வாயிலாக உணவு தயாரிப்பின் நுணுக்கங்களையும், பாரம்பரிய உணவு வகைகளின் சிறப்புகளையும் மக்களிடம் எடுத்து சென்றவர்.