5 மணி 35 நிமிடங்களில் 430 கி.மீ – வந்தே பாரத் ரயிலுக்கு இணையான வேகத்தில் பயணித்த வைகை எக்ஸ்பிரஸ் சாதனை
Vaigai Express Speed Record : சென்னை எழும்பூர் – மதுரை இடையே இயக்கப்படும் வைகை சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், தொடக்கத்தில் ஏற்பட்ட தாமதத்தை ஈடுகட்டி, செங்கல்பட்டு – மதுரை இடையேயான 430 கி.மீ. தூரத்தை 5 மணி 35 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளது.
மதுரை, அக்டோபர் 25 : சென்னை எழும்பூர் – மதுரை இடையே இயக்கப்படும் வைகை சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், தொடக்கத்தில் ஏற்பட்ட தாமதத்தை ஈடுகட்டி, செங்கல்பட்டு – மதுரை இடையேயான 430 கி.மீ. தூரத்தை 5 மணி 35 நிமிடங்களில் கடந்ததாக, அதில் பயணித்த பயணிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். வந்தே பாரத் ரயிலுக்கு (Vande Bharat) இணையான வேகத்தில் வைகை எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
அரை மணி நேரத் தாமதத்துடன் தொடக்கம்
பயணிகள் அளித்த தகவலின் படி வைகை சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (12635) சென்னை எழும்பூரிலிருந்து சுமார் 10 நிமிடம் தாமதமாக, பிற்பகல் 1.25 மணிக்குப் புறப்பட்டது. அதன் பிறகு, கோடம்பாக்கம் பகுதியில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, ரயில் சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், பயணத்தின் தொடக்கத்திலேயே சுமார் அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
இதையும் படிக்க : திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயதுச் சிறுவன் உயிரிழப்பு – வெளியான பரபரப்பு தகவல்




தாமதத்துடன் இயக்கப்பட்ட ரயில், பிற்பகல் 2.25 மணிக்குத் தாம்பரத்தையும், சுமார் 2.58 மணிக்குச் செங்கல்பட்டையும் அடைந்தது. அங்கிருந்து, சுமார் 103 கி.மீ. தொலைவில் உள்ள விழுப்புரத்தை ஒரு மணி 4 நிமிடங்களில் சென்றடைந்தது. அதாவது, அந்தப் பகுதியில் மணிக்குச் சராசரியாக சுமார் 97 கி.மீ. வேகத்தில் ரயில் பயணித்துள்ளது.
விழுப்புரத்தில் ரயில் ஓட்டுநர்கள், உதவி ஓட்டுநர்கள், ரயில் மேலாளர்கள் மாற்றப்பட்டு, மதுரைக் கோட்டத்தைச் சேர்ந்த குழுவினர் பொறுப்பேற்றனர். மதூர் அருகே கட்டுமானப் பணிகளுக்காக விதிக்கப்பட்ட வேகக் கட்டுப்பாட்டுப் பகுதியைத் தவிர, பெரும்பாலான வழித்தடங்களில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகமான மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. தெளிவான சிக்னல்களும், கட்டுப்பாட்டு அலுவலர்களின் ஒருங்கிணைப்பும் இதற்குப் பெரிதும் உதவியதாக அருண் பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, இரவு 8.37 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தின் 7வது நடைமேடைக்கு ரயில் வந்து சேர்ந்தது. 3வது நடைமேடையில் நேரடியாக அனுமதிக்கப்பட்டிருந்தால், இன்னும் சில நிமிடங்கள் முன்னதாகவே வந்து சேர்ந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டிலிருந்து மதுரை வரை, இடையில் 9 ரயில் நிலையங்களில் நின்றதுடன், 430 கி.மீ. தூரத்தை 5 மணி 35 நிமிடங்களில் கடந்துள்ளது. அதாவது சராசரியாக மணிக்கு சுமார் 77 கி.மீ. வேகத்தில் பயணித்திருக்கிறது.
வந்தே பாரத்துக்கு இணையான மாஸ்டர் பிளாஸ்டர்
சென்னை – விஜயவாடா வழித்தடத்தில் இயக்கப்படும் ராஜ்தானி, கோரமண்டல், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களுடன் ஒப்பிடும்போது, நிறுத்தங்களின் எண்ணிக்கையையும் இயக்கச் சூழலையும் கருத்தில் கொண்டால், வைகையின் இந்தப் பயணம் மிகச் சிறப்பானது என கூறப்படுகிறது. வந்தே பாரத் ரயில்களின் வேகத்துக்கு இணையாக இயக்கப்பட்ட வைகை எக்ஸ்பிரஸை, தெற்கு ரயில்வேயின் ‘மாஸ்டர் பிளாஸ்டர் என பயணிகள் புகழந்துள்ளனர்.
இதையும் படிக்க : அரிசியை பாலிஷ் போட்டு விற்பதுதான் மாற்றமா? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி – என்ன நடந்தது?
விழுப்புரத்திலிருந்து மதுரை வரை ரயிலை இயக்கிய மதுரைப் பணிமனையைச் சேர்ந்த மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுநர் கே. ஐயப்பன், மூத்த உதவி ஓட்டுநர் டி. சுரேஷ் ஆகியோருக்கும், சென்னை எழும்பூரிலிருந்து விழுப்புரம் வரை இயக்கிய எழும்பூர் பணிமனையைச் சேர்ந்த ஓட்டுநர் பி. சங்கர் கணேஷ், மூத்த உதவி ஓட்டுநர் ராஜகுமார் ஆகியோருக்கும் அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஒரு ரயிலின் சிறப்பான இயக்கம் என்பது தனிநபர் ஒருவரின் முயற்சி மட்டுமல்ல. ஓட்டுநர்கள், உதவி ஓட்டுநர்கள், கட்டுப்பாட்டு அலுவலர்கள், ரயில் மேலாளர்கள், நிலையப் பணியாளர்கள், பராமரிப்புப் பணியாளர்கள் எனப் பல்வேறு பிரிவு ஊழியர்களின் ஒருங்கிணைந்த உழைப்பின் பலன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.