AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 5 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை எச்சரிக்கை..

Tamil Nadu Rains: இன்று (அக். 25) புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யக்கூடும்.

வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 5 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை எச்சரிக்கை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 25 Oct 2026 14:58 PM IST

அக்டோபர் 25, 2026: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, அக்டோபர் 27-ஆம் தேதி மிகத் தீவிர புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில், இன்று (அக். 25) ஐந்து மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று (அக். 24) மாலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து நகர்ந்து, இன்று காலை 8.30 மணியளவில் அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுகிறது.

இது தெற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தொடர்ந்து, நாளை (அக். 26) காலை புயலாகவும், அக்டோபர் 27-ஆம் தேதி காலை தீவிர புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது. பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று, ஆந்திரக் கடலோரப் பகுதிகளுக்கு அருகிலுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடையக்கூடும். ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே மிகத் தீவிர புயலாகக் கரையைக் கடக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இன்று 5 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை

இன்று (அக். 25) புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனுடன் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விருதுநகர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்காசி, தூத்துக்குடி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 26-ல் தென் மாவட்டங்களில் கனமழை

நாளை (அக். 26) புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களைப் பகிர்ந்ததாகக் குற்றச்சாட்டு: ஆரணி அருகே ஓய்வுபெற்ற ராணுவ கேப்டன் கைது

ஏனைய தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

அக்டோபர் 27 முதல் மழை படிப்படியாகக் குறைய வாய்ப்பு

அக்டோபர் 27-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஏனைய தென் தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழையும், பிற பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 28-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க: வாக்களிக்காதவர்கள் இல்லை வாக்களித்தவர்கள் கூட புலம்பும் நிலையில் தான் இன்றைய ஆட்சி இருக்கிறது – மு.க ஸ்டாலின் தாக்கு..

அக்டோபர் 29 மற்றும் 30-ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.  அக்டோபர் 31-ஆம் தேதியும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலிலும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று காலை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளப் பகுதிகளில் நிலவுகிறது. மேலும், இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதியிலிருந்து கேரளா வழியாக வட தமிழகக் கடலோரப் பகுதிகள் வரை, சுமார் 3.1 கி.மீ. உயரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

சென்னையில் இன்று மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

 

Follow Us