வீட்டில் இருந்த பெண் கொடூர கொலை.. நகைக்காக தங்கை மகன் வெறிச்செயல்.. பகீர் சம்பவம்!
Woman Murdered Over Gold Chain | தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், தங்க சங்கிலிக்காக அவரது தங்கை மகனே அவரை கொடூரமாக கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி, அக்டோபர் 29 : தூத்துக்குடி (Tuticorin) மாவட்டம், கந்தன்காலனி, 3வது தெரு, மெற்கு பகுதியை சேர்ந்தவர் சித்திரைவேல். இவருக்கு 47 வயதில் சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சித்திரைவேல் கேரளம் மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள ஒரு கடையில் டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவர்களின் மூத்த மகன் திருமணமான நிலையில், சங்கர் காலனி பகுதியில் தனியாக வசித்து வருகிறார். மகள் சென்னையில் வேலை செய்து வரும் நிலையில், சசிகலா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
வீட்டில் இருந்த பெண் கொடூர கொலை
இந்த நிலையில், சசிகலா வீட்டில் தனியாக இருக்கும் நேரம் பார்த்து வீட்டிற்கு யாரோ ஒருவர் நுழைந்துள்ளார். அவர் சசிகலாவின் கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், அதற்கு பிடி கொடுக்காமல் சசிகலா போராடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சசிகலா ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில், அந்த நபர் கழுத்தில் இருந்த நான்கு சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க : ராணிப்பேட்டையில் குழந்தை கடத்தல்.. தவெக ஆதரவாளர் அதிரடி கைது.. வேலூர் மத்திய சிறையில் அடைப்பு!




விசாரணையில் வெளியான அதிர்ச்சி உண்மை
சசிகலாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள், இந்த சம்பவம் குறித்து அவரது மூத்த மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஓடி வந்து பார்த்த அவர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சசிகலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க : செங்கல்பட்டில் அதிர்ச்சி.. மின் கட்டணத்தை அபேஸ் செய்த கணக்கீட்டாளர் பணியிடை நீக்கம்.. அதிரடி நடவடிக்கை!
அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இந்த கொடூர கொலையை அரங்கேற்றியது சசிகலாவின் தங்கை மகனான 27 வயது விக்னேஷ் என்பது தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.