ராணிப்பேட்டையில் குழந்தை கடத்தல்.. தவெக ஆதரவாளர் அதிரடி கைது.. வேலூர் மத்திய சிறையில் அடைப்பு!
Ranipet TVK Supporter Arrested : ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு வயது பெண் குழந்தை கடத்தப்பட்ட வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டை பகுதியில் குப்பை சேகரிக்கும் தொழில் செய்து வருபவர் சேகர். இவரது மனைவி பிரேமா. தம்பதிகள் ஒரு வயதில் பிரேமா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 23- ஆம் தேதி இரவு மாணிக்கம் நகர் அருகே உள்ள நடைபாதையில் தம்பதி தங்களது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தனர். மறுநாள் காலையில் பார்த்தபோது, குழந்தையை காணாமல் பெற்றோர் திடுக்கிட்டனர். இது தொடர்பாக சிப்காட் காவல் நிலையத்தில் பிரேமா அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழந்தை காணாமல் போன இடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.
ஒரு வயது குழந்தையை கடத்திய தவெக ஆதரவாளர்
இதில், அக்ராவரம் பகுதியை சேர்ந்த கௌசல்யா என்பவரின் தோழியான ஆந்திர மாநிலம், ரேணிகுண்டாவை சேர்ந்த மல்லீஸ்வரி தனக்கு வளர்ப்பு குழந்தை தேவை என்று கூறியுள்ளார். இதனை தனது கணவர் பூபதியிடம் கௌசல்யா தெரிவித்த நிலையில், பூபதி தனது நண்பரும், கார் ஓட்டுநருமான தவெக ஆதரவாளர் சந்தோஷிடம் தெரிவித்துள்ளார். அதன்படி, சந்தோஷ், பூபதி மற்றும் குமரன் ஆகிய மூவரும் சேர்ந்து பிரேமாவின் குழந்தை மகேஸ்வரியை கடத்தி ஆந்திராவில் வசித்து வரும் மல்லீஸ்வரியிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் படிக்க: சோப்பு- ஷாம்புவால் ஆற்றில் நுரையா? அமைச்சர் பொறுப்பற்று பேசலாமா? நறுக் குட்டு வைத்த தவாக வேல்முருகன்!




ஆந்திராவில் குழந்தை மீட்பு- 5 பேர் கைது
இதை அறிந்த போலீசார் ரேணிகுண்டா பகுதிக்கு சென்று மல்லீஸ்வரியை அதிரடியாக கைது செய்து குழந்தையை மீட்டனர். அத்துடன், குழந்தை கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய கௌசல்யா ( 35 வயது), சந்தோஷ் ( 35 வயது), பூபதி ( 42 வயது) மற்றும் குமார் ( 30 வயது) ஆகிய 5 பேரை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், வேறு ஏதேனும் குழந்தைகளை கடத்தி உள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
தவெக ஆதரவாளர் சிறையில் அடைப்பு
பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதில், கைது செய்யப்பட்ட சந்தோஷ் என்பவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தீவிர ஆதரவாளர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இவர் தவெக நிர்வாகி ஒருவருக்கு ஓட்டுனராக பணிபுரிந்து வந்ததும், பணத்துக்காக குழந்தை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
மேலும் படிக்க: திருச்சி விமான நிலையத்தில் அதிர்ச்சி.. பயணி உடைமையில் நெளிந்த உயிரினம்.. டிஆர்ஐ அதிகாரிகள் ஷாக்!