தேனியில் பகீர் வேட்டை.. யானை தந்தம் கடத்திய 4 பேர் அதிரடி கைது.. வனத்துறை அதிரடி நடவடிக்கை!
Theni Elephant Tusks Smuggling : தேனி மாவட்டத்தில் காரில் யானை தந்தங்களை கேரள மாநிலத்துக்கு கடத்தி செல்ல முயன்ற 4 பேரை கம்பம் வனச்சரக அலுவலர் தலைமையிலான வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தேனி மாவட்டத்தில் யானை தந்தங்கள் கடத்தப்படுவதாக மதுரை மண்டல வனம் மற்றும் வன உயிரின குற்ற கட்டுப்பாட்டு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், வனத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, கம்பம் பகுதியில் இருந்து கேரள மாநிலம் நோக்கி சென்ற இரு கார்களை நிறுத்தி கம்பம் மேற்கு வனச்சரகர் தீன தயாளன் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, காரில் 4 யானை தந்தங்கள் மறைத்து கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வனத்துறை ஊழியர்கள் யானை தந்தங்களை பறிமுதல் செய்து காரில் வந்த நபர்களை பிடித்து வனத்துறை அலுவலகதுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கேரளத்துக்கு யானை தந்தங்கள் கடத்த முயன்ற 4 பேர் கைது
இதில், அவர்கள் யானை தந்தங்களை கேரள மாநிலத்துக்கு கடத்தி சென்று விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, யானை தந்தங்களை கடத்தி செல்ல முயன்ற முத்துராமலிங்க தேவர் தெருவை சேர்ந்த கிருஷ்ண பிரபு ( 42 வயது), மதுரை, கூடல் நகரை சேர்ந்த அன்னமராஜா ( 53 வயது), ஆனை மலையன்பட்டியை சேர்ந்த விஜயன் ( 42 வயது), மதுரை, பாப்பாக்குடி பகுதியில் உள்ள சிக்கந்தர் சாவடியை சேர்ந்த வாசுதேவன் ( 52 வயது) ஆகிய 4 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும் படிக்க: ஒரு யூனிட் மின்சாரம் ரூ.41.50-க்கு கொள்முதல் செய்யும் திட்டம்.. பின்வாங்கிய தவெக அரசு.. நிர்மல்குமார் கொடுத்த ஸ்டேட்மெண்ட்!




கைதானவர்களிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை
தொடர்ந்து, கடத்தலுக்கு அவர்கள் பயன்படுத்திய 2 கார்கள் மற்றும் 4 யானை தந்தங்களையும் வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் கம்பம் மேற்கு வனச்சரகர் தீனதயாளன் தீவிர விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையை தொடர்ந்து, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்திற்கு கடத்திச் செல்ல முயன்ற யானை தந்தங்கள் ஒவ்வொன்றும் சுமார் 20 முதல் 30 கிலோ வரை எடை இருந்தன.
யானை தந்தங்கள் கடத்த காரணம் என்ன
அவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடத்திச் செல்லப்படும் யானை தந்தங்களில் இருந்து சிலைகள், சிறிய பொம்மைகள், கலை பொருட்கள், திருமண வளையல்கள், மாலைகள், இசைக்கருவிகள் உள்ளிட்டவை செய்வதற்கும் மருத்துவத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதில், அதிக லாபம் கிடைக்கும் என்பதால் யானை தந்தங்கள் கடத்தப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
மேலும் படிக்க: தமிழகத்தில் அடுத்தடுத்து பக் பக்.. செஞ்சியை தொடர்ந்து தி.மலையில் 3 சிறுமிகள் மாயம்.. உறைந்துபோன பெற்றோர்கள்!