தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையா.. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. ஆனால் ஒரு ட்விஸ்ட்!
Diwali Next Day Public Holiday : தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான திங்கள்கிழமை ( நவம்பர் 9- ஆம் தேதி) பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் நவம்பர் 8- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வந்ததால் அரசு மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும் சோகம் அடைந்தனர். அடுத்ததாக தீபாவளி பண்டிகை கொண்டாடிய மறுநாளே பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டுமா என்ற எண்ணம் தான் மாணவர்கள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. தற்போது, அந்த எண்ணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் திங்கள்கிழமை ( நவம்பர் 9- ஆம் தேதி) பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், தீபாவளி பண்டிகைக்கு சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.
தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை அறிவிப்பு
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நவம்பர் 8- ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். அவர்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடி விட்டு மறுநாள் திங்கள்கிழமை வெளியூர்களுக்கு உடனடியாக திரும்ப முடியாது. எனவே, அவர்களின் வசதிக்காக திங்கள்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இந்த விடுமுறை பொருந்தும்.
மேலும் படிக்க: என்னையா கேலி செய்கிறாய்.. என்ன செய்கிறேன் பார்.. நண்பனை கோடாரியால் பதம் பார்த்த தொழிலாளி.. தூத்துக்குடியில் பகீர் சம்பவம்!




நவம்பர் 28- ஆம் தேதி வேலை நாள்
இதை தவிர்த்து தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களில் உள்ள கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட தகுந்த ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் செய்ய வேண்டும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 28- ஆம் தேதி ( சனிக்கிழமை) பணி நாளாக செயல்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய பண்டிகைகளின்போது, ஏராளமான பொதுமக்கள் வெளியூர்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
விடுமுறை அறிவிக்கக்கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை
அவர்கள் அங்கு பண்டிகைகளை கொண்டாடிவிட்டு வெளியூர் திரும்புவதற்கு ஏதுவாக பண்டிகைக்கு முந்தைய நாளோ அல்லது அடுத்த நாளோ அரசு சார்பில் விடுமுறை வழங்கப்படுவது வழக்கத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் சனிக்கிழமை விடுமுறை வருகிறது. மறுநாள் திங்கள்கிழமை பணி நாள் என்பதால் அந்த நாளில் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்து கோரிக்கை எழுந்து வந்தது. அதன் அடிப்படையில் தற்போது, திங்கள்கிழமை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கட்டுக்கட்டாக பணத்துடன் கண்டெய்னர் லாரி.. துப்பாக்கியுடன் சுற்றி நின்ற போலீசார்.. சேலத்தில் நள்ளிரவில் பரபரப்பு!