சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து – தரைமட்டமான அறை
Explosion at Firecracker Factory : சிவகாசி அருகே மம்சாபுரத்தில், வாரி என்ற பெயரில் பட்டாசு ஆலையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பட்டாசு ஆலையின் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து, அந்த அறை முழுமையாக இடிந்து தரைமட்டமானது
விருதுநகர், அக்டோபர் 28 : விருதுநகர் (Virudhunagar) மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில், அக்டோபர் 28, 2026 இன்று மதியம் ஏற்பட்ட வெடி விபத்தில், ஒரு அறை முற்றிலும் தரைமட்டமானது. விபத்து நடந்தபோது தொழிலாளர்கள் உணவு இடைவேளைக்காக வெளியே சென்றிருந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தொடக்கக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீபாவளி உற்பத்தி தீவிரம்
சிவகாசி அருகே மம்சாபுரத்தில், வாரி என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். வருகிற நவம்பர் 8, 2026 அன்று தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கு குறைவான நாட்களே உள்ளன. சிவகாசி பட்டாசுகள் உலக அளவில் ஏற்றுமதியாகும் நலையில் அதற்கான தேவை அதிகரித்துல்ளது. இதனையடுத்து சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்திப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
இதையும் படிக்க : திருச்சி விமான நிலையத்தில் அதிர்ச்சி.. பயணி உடைமையில் நெளிந்த உயிரினம்.. டிஆர்ஐ அதிகாரிகள் ஷாக்!




உணவு இடைவேளையால் தப்பிய உயிர்கள்
இந்நிலையில், அக்டோபர் 28, 2026 இன்று மதியம் ஆலையின் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்துச் சிதறின. இதில், அந்த அறை முழுமையாக இடிந்து தரைமட்டமானது. தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்து நிகழ்ந்தது உணவு இடைவேளை நேரம் என்பதால், அந்த அறையில் பணியாற்றிய தொழிலாளர்கள் அனைவரும் வெளியே சென்றிருந்தனர். இதனால், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. சில நிமிடங்கள் முன்னதாக விபத்து நிகழ்ந்திருந்தால், பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதால், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விபத்துக்குக் காரணம் என்ன?
பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக இந்த வெடி விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனத் தொடக்கக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையில் பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகளை சுற்றிலும் குளம்போல மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தற்போது மழை குறைந்துள்ள நிலையில் பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் உற்பத்தி செய்த பட்டாசுகளை உலர வைக்க முடியாததால் உற்பத்தியை தொடர முடியாத சூழல் நிலவுவதுடன், விற்பனையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : பாசன வசதி இல்லாத விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க ரூ.1.20 லட்சம் வரை மானியம்! தமிழக அரசு அறிவிப்பு
தீபாவளி பண்டி கைக்கு வடமாநிலங்களுக்கு 90 சதவிகித பட்டாசுகள் அனுப்பப்பட்டு விட்டன. தற்போது தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு பட்டாசுகள் அனுப்பபும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால் பட்டாசுகளை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.