மழை பெய்யும், கதாபாத்திரங்கள் பேசும்: கூகுளின் புதிய ‘ஜீனி 4’ ஏஐ அறிமுகம் – அப்படி என்ன ஸ்பெஷல்?
Genie 4 AI Model : கூகுள் நிறுவனம் கடந்த அக்டோபர் 27, 2026 அன்று, ஜீனி 4-ஐத் தனது புதிய வேர்ல்ட் மாடலாக அறிமுகப்படுத்தியது. முன்பே பதிவு செய்யப்பட்ட வீடியோவைக் காட்டுவதற்குப் பதிலாக, பயனரின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப நிகழ்நேரத்தில் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் புதிய சூழலை இது உருவாக்குகிறது.
புகைப்பட எடிட்டிங் முதல் வீடியோ உருவாக்கம் வரை, பல வேலைகளை செயற்கை நுண்ணறிவு கருவிகள் ஏற்கெனவே எளிதாக மாற்றியுள்ளது. இந்த நிலையில், ஒரு படத்தையோ வீடியோவையோ மட்டுமின்றி, நாம் உள்ளே நுழைந்து உலவாக் கூடியே ஒரு முழு டிஜிட்டல் உலகத்தையே உருவாக்கும் ஜீனி 4 (Genie) என்ற புதிய ஏஐ மாடலை கூகுள் டீப்மைண்ட் அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுளின் புதிய ‘ஜீனி 4’ ஏஐ அறிமுகம்
கூகுள் நிறுவனம் கடந்த அக்டோபர் 27, 2026 அன்று, ஜீனி 4-ஐத் தனது புதிய வேர்ல்ட் மாடலாக அறிமுகப்படுத்தியது. முன்பே பதிவு செய்யப்பட்ட வீடியோவைக் காட்டுவதற்குப் பதிலாக, பயனரின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப நிகழ்நேரத்தில் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் புதிய சூழலை இது உருவாக்குகிறது. பார்ப்பதற்கு வீடியோ கேம் போலத் தோன்றினாலும், அது முழுக்க முழுக்க ஏஐ மூலம் அந்த நேரத்திலேயே உருவாக்கப்படுகிறது.
இதையும் படிக்க : இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் Oppo Find X10 Series.. முக்கிய அம்சங்கள் என்ன என்ன?
இதன் முக்கியச் சிறப்பம்சம், சிமுலேஷன் இயங்கிக்கொண்டிருக்கும்போதே அதில் மாற்றங்களைச் செய்யலாம் என்பதுதான். உதாரணமாக, மழை பெய்யட்டும் என பிராம்ப்ட் கொடுத்தால் அந்த உலகில் மழை பெய்யத் தொடங்கும். மேலும் கேமரா கோணத்தைச் சுழற்றலாம். புதிய கதாபாத்திரத்தையோ பொருளையோ சேர்க்கலாம்.
ஒலிகளையும் தானே உருவாக்கும்
ஜீனி 4 என்ற மாடலின் மிகவும் சுவாரசியமான அம்சம், அதன் ஒலி உருவாக்கும் திறன் கொண்டது. மரங்களின் ஊடே வீசும் காற்றின் சத்தம், கடல் அலைகளின் ஓசை, பின்னணி இசை ஆகியவற்றை நிகழ்நேரத்திலேயே இது உருவாக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது. மேலும், அந்த டிஜிட்டல் உலகில் உள்ள கதாபாத்திரங்கள், பயனரின் கட்டளைகளுக்கும் நிகழ்வுகளுக்கும் ஏற்பப் பேசிக்கொள்ளும் உரையாடல்களையும் இது உருவாக்கும். சூழல் மாற மாற உரையாடல்களும் தானாக மாறுவதால், ஒவ்வொரு ஒலியையும் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
ஜீனி 4, கூகுளின் ஜெமினி போன்ற செயற்கை நுண்ணறிவு மாடல்களின் திறன்களைப் பயன்படுத்துகிறது. ஜெமினி ஓம்னி மாடல், நிஜ உலகைப் போலவே தோற்றமளிக்கும், செயல்படும் சிமுலேஷன்களை உருவாக்க உதவுகிறது. பிற ஜெமினி மாடல்கள், அந்த டிஜிட்டல் உலகில் நிகழ்வுகளின் வரிசையும் சூழலும் தொடர்ச்சியாகப் பராமரிக்கப்படுவதை உறுதி செய்கின்றன. குறிப்பாக, ‘ஜெமினி 3.8 ஃபிளாஷ்’ மாடல், சிமுலேஷனின்போது ஒரு வழிகாட்டியாகச் செயல்படுவதாக கூகுள் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் காட்சியைத் தொடர்ந்து கண்காணித்து, பெரிய இலக்குகளைச் சிறு சிறு பணிகளாகப் பிரித்து, ஒவ்வொரு படியும் சரியாக நிறைவேறுகிறதா என்பதை அது சரிபார்க்கிறது.
இதையும் படிக்க : வழிக்கு வந்த டெலிகாம் நிறுவனங்கள்.. டேட்டா இல்லாத 3 ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்த ஏர்டெல்!
ரோபோட்டிக்ஸ் ஆராய்ச்சியில் ஜீனி 4
விளையாட்டு, பொழுதுபோக்கு மட்டுமின்றி, ரோபோட்டிக்ஸ் துறையிலும் இதன் பயன்பாட்டை கூகுள் ஆராய்ந்து வருகிறது. தனது ‘ஜெமினி ரோபோட்டிக்ஸ்’ ஆராய்ச்சியில், ‘ஜெமினி 4 ஆர்கான்’, ஜீனி 4 ஆகியவற்றைப் பயன்படுத்தி கூகுள் டீப்மைண்ட் சோதனைகளை நடத்தி வருகிறது. நிஜ உலகில் ரோபோக்களைச் சோதிப்பதற்கு முன்பே, இத்தகைய டிஜிட்டல் உலகங்களில் அவற்றுக்குப் பயிற்சி அளிக்க இது உதவும். ஜீனி 4 தற்போது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை. இது ஆரம்பகட்ட நிலையில் உள்ளது. குறைபாடுகள் என்ன?
ஆரம்பகட்ட நிலையில் உள்ளதால், ஒவ்வொரு முறையும் சரியான முடிவுகளைத் தரும் என உறுதியாகச் சொல்ல முடியாது என கூகுளே ஒப்புக்கொண்டுள்ளது. நீண்ட நேரம் சிமுலேஷன் இயங்கும்போதோ, தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்படும்போதோ, சில பொருள்களின் தோற்றம் மாறக்கூடும். காட்சி நகரும்போது சிறிய பிரச்னைகளும் தென்படலாம்.



