சட்டப்பேரவையின் மாண்பை குலைக்கும் தவெகவினர்.. நயினார் நாகேந்திரன் கடும் பாய்ச்சல்!
Nainar Nagendran : தமிழக சட்டப்பேரவையில் மதம் மற்றும் ஜாதிகள் குறித்து பேசி அதன் மாண்பை குலைப்பதாக சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் மற்றும் அமைச்சர் மரிய வில்சன் ஆகியோரை குறிப்பிட்டு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஜாதி, மதம் குறித்து பேசி வரும் சபாநாயகர், அமைச்சர் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகர் பதவி என்பது மதம், ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு நடுநிலை வகிக்க வேண்டியதாகும். ஆனால், தற்போதைய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், தான் அமர்ந்துள்ள இருக்கையின் கண்ணியத்தை மறந்து, தன்னை ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவராக பகிரங்கமாக அடையாளப்படுத்திக் கொள்கிறார். அத்துடன், தான் சார்ந்த மதத்தின் ஒரு பிரிவுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து கொண்டே வெளிப்படையாக கோரிக்க வைத்துள்ளார். இந்த கோரிக்கை முதல்- அமைச்சர் ஜோசப் விஜய்க்கு கட்டளை இடுவது போல அமைந்துள்ளது. தமிழக சட்டமன்றம் வரலாற்று சிறப்புமிக்கது ஆகும்.
ஜெப மாலையுடன் பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர்
இதற்கு முன்னதாக பல்வேறு சட்டப்பேரவை தலைவர்கள் இந்த பதவியில் இருந்துள்ளனர். அவர்கள் யாரும் தான் சார்ந்த மதத்தையோ அல்லது ஜாதியையோ முன்னிலைப்படுத்தி பேசியது கிடையாது. ஆனால், தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்த நாள் முதல் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் இது சிறுபான்மையினருக்கான அரசு என முன்னிலைப்படுத்தி பேசி உள்ளார். நிதித்துறை அமைச்சர் மரிய வில்சனோ கையில் ஜெபமாலையுடன் சட்டப்பேரவைக்கு வருகை தந்து பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
மேலும் படிக்க: குடிநீர் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட அதிகாரி.. லஞ்ச ஒழிப்பு போலீஸ் விரித்த வலை.. வசமாக சிக்கிய சென்னை உதவி பொறியாளர்!




தமிழ் மொழியை விட மதம் உயர்வு என சுட்டிக்காட்டிய அமைச்சர்
அதோடு நிறுத்திக் கொள்ளாமல் தான் ஒரு கிறிஸ்தவர் என்று சட்டப்பேரவையில் குறிப்பிட்டுள்ளார். அவர், தமிழ் மொழியை விட தனது மதமே உயர்ந்தது என சுட்டிக்காட்டி உள்ளார். மேலும், சட்டமன்றத்தில் பைபிள் வசனங்களை குறிப்பிட்டு பேசியுள்ளார். அவரின் மத நம்பிக்கைகளை தவறு என்று யாரும் கூறவில்லை. ஆனால், தங்களது தனிப்பட்ட நம்பிக்கைகளை சட்டப்பேரவைக்குள் பேசுவதும், அதனை செயல்படுத்துவதுமே சட்டமன்றத்தின் மாண்பை குலைப்பதாக உள்ளது.
சட்டமன்ற மாண்பை காக்கும் வகையில் செயல்படுக
இந்த சட்டப்பேரவையே ஒரு குறிப்பிட்ட மதம் நோக்கின் நகர்த்துவது போல உள்ளது. இது எதிர்கால சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு சரியானது இல்லை. அனைத்துக்கும் மேலாக சபாநாயகர் பதவியில் இருப்பவர் மதம் குறித்து பேசுவது முற்றிலும் தவறான விஷயமாகும். எனவே, இனி மேலாவது சட்டப்பேரவை தலைவர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்களும் தங்களது தனிப்பட்ட மதம் மற்றும் ஜாதி ஆகிய விஷயங்களை சட்டமன்றத்துக்குள் கொண்டு வராமல் இருத்தல் வேண்டும். அத்துடன், சட்டமன்றத்தின் மாண்பை காக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: நேபாள வெள்ளத்தில் சிக்கிய 21 தமிழர்கள்.. காத்மண்டுவில் இருந்து விமானம் மூலம் பாதுகாப்பாக சென்னை வருகை!