குடிநீர் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட அதிகாரி.. லஞ்ச ஒழிப்பு போலீஸ் விரித்த வலை.. வசமாக சிக்கிய சென்னை உதவி பொறியாளர்!
Chennai Water Board Assistant Engineer Arrested : சென்னை மாவட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக ரூ. 6 ஆயிரம் லஞ்சம் கேட்ட குடிநீர் வாரிய உதவி பொறியாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் மாதவரம் மண்டலம், 29- ஆவது வார்டு பகுதியில் உள்ள தணிகாசலம் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் ( 46 வயது). இவர், அந்த பகுதியில் புதிதாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்த வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்க கோரி மாநகராட்சியில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்காக, குடிநீர் வாரிய உதவி பொறியாளர் முருகேசன் என்பவர் ஜெயக்குமாரை அழைத்து குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக ரூ. 6 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு, தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று ஜெயக்குமார் தெரிவித்த நிலையில், பணம் கொடுக்கவில்லை என்றால் குடிநீர் இணைப்பு வழங்கப்படாது என திட்ட வட்டமாக தெரிவித்துள்ளாராம். இந்த நிலையில், சில நாட்களுக்கு பிறகு மீண்டும் ஜெயக்குமாரை தொடர்பு கொண்டு பணத்தை தருமாறு முருகேசன் தெரிவித்துள்ளார்.
தவணை முறையில் லஞ்சம் கேட்ட உதவி பொறியாளர்
அப்போதும், பணம் இல்லை என்று ஜெயக்குமார் தெரிவித்த நிலையில், சிறிதளவு பணத்தை முன்னதாக தருமாறும், குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட பிறகு மீதி பணத்தை தருமாறு முருகேசன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஜெயக்குமார் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். அத்துடன் ஜெயக்குமார் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் படிக்க: 27 வழக்குகள்… 6 கொலைகள்.. தூத்துக்குடி துப்பாக்கி செல்வம் கொடூர கொலை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மர்ம கும்பல்!




லஞ்சம் பெற்ற உதவி பொறியாளர் அதிரடி கைது
அந்த புகாரின் பேரில், போலீசார் ரசாயன பொடி தடவப்பட்ட ரூ. 6 ஆயிரம் நோட்டுகளை ஜெயக்குமாரிடம் கொடுத்து, குடிநீர் வாரிய உதவி பொறியாளரிடம் வழங்குமாறு அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில், குடிநீர் வாரிய அலுவலகத்தில் இருந்த உதவி பொறியாளர் முருகேசனிடம், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெயக்குமார் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார் அவரை கையும் களவுமாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.
குடிநீர் வாரிய உதவி பொறியாளர் சிறையில் அடைப்பு
தொடர்ந்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்திற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குடிநீர் வாரிய அலுவலக கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
மேலும் படிக்க: பயணிகள் கவனத்துக்கு.. செங்கோட்டை ரயில்கள் சேவையில் திடீர் மாற்றம்.. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!