27 வழக்குகள்… 6 கொலைகள்.. தூத்துக்குடி துப்பாக்கி செல்வம் கொடூர கொலை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மர்ம கும்பல்!
Thoothukudi Rowdy Murdered : தூத்துக்குடி மாவட்டத்தில் கூடங்குளம் பகுதியில் பிரபல ரவுடியை மர்ம நபர்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கூடங்குளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்து நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு செல்வ முருகன் என்ற மகன் இருந்தார். இவர், அந்த பகுதியில் தூத்துக்குடி செல்வம். துப்பாக்கி செல்வம் என அழைக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமகிருஷ்ணனை அந்த பகுதியை சேர்ந்த நாராயணமூர்த்தி என்பவர் அரிவாளால் வெட்டினார். இதையறிந்த செல்வ முருகன் 19 வயதில் நாராயண மூர்த்தியை கொலை செய்து விட்டு சிறைக்கு சென்றார். இதை தொடர்ந்து, பல்வேறு குற்ற செயல்களில் அவர் ஈடுபட்டு வந்த நிலையில், இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 6 கொலை வழக்குகள் உட்பட 27- க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.
பிரபல ரவுடியை வெட்டி கொன்ற மர்ம கும்பல்
இந்த நிலையில், பிரபல ரவுடியாக வலம் வந்த செல்வம் முருகன் கூடங்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இந்த சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடல் கூறாய்வு மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் படிக்க: பயணிகள் கவனத்துக்கு.. செங்கோட்டை ரயில்கள் சேவையில் திடீர் மாற்றம்.. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!




கொலை குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
இதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக செல்வமுருகனின் குடும்பத்தினர் கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்டதுக்கான காரணம் என்ன என்பது குறித்தும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைதான சம்பவம்
இதனிடையே, கடந்த 2024- ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சு கிராமம் பகுதியில் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் நடந்தது. இதில், தொடர்புடைய செல்வ முருகன் சுசீந்திரம் அருகே உள்ள பேரூரில் பதுங்கி இருந்த போது, அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்கும் முயன்றனர். அப்போது, காவல் உதவி ஆய்வாளர் லி.பி. பால்ராஜ், செல்வ முருகன் கத்தியால் தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது. இதில், செல்வம் முருகனை போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்து கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: திருவள்ளூரில் கொடூரம்.. ஆந்திர பெண் கழுத்து நெறித்து கொலை.. முகத்தில் ஆசிட் ஊற்றி அடையாளம் அழிக்க முயற்சி!