திருவள்ளூரில் கொடூரம்.. ஆந்திர பெண் கழுத்து நெறித்து கொலை.. முகத்தில் ஆசிட் ஊற்றி அடையாளம் அழிக்க முயற்சி!
Thiruvallur Woman Murdered : திருவள்ளூர் மாவட்டத்தில் உறவினர் வீட்டுக்கு வந்திருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பெண்ணை ஆசிட் வீசியும், கழுத்தை நெறித்தும் மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள குப்பம் தொட்டார் ரெட்டி பகுதியில் உள்ள வயல்வெளி அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது முகத்தில் ஆசிட் வீசப்பட்டு சிதைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இது தொடர்பாக ஊத்துக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், ஊத்துக்கோட்டை காவல் ஆய்வாளர் தேவராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பெண் கொலை
இதில், போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் ஆந்திர மாநிலம், நாகலாபுரம் அருகே உள்ள சவரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அருணா ( 40 வயது) என்பதும், இவர், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை அருகே உள்ள பதட்டூர் கண்டிகை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் தான் அவர் வீட்டை விட்டு வெளியே சென்று நிலையில் மர்ம நபர்களால் ஆசிட் வீசி கொலை செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அருணாவின் கழுத்தில் நெறிக்கப்பட்டதற்கான தடயம் இருந்துள்ளது.
மேலும் படிக்க: சிசிடிவி கேமராவில் ஸ்பிரே.. வெல்டிங் மெஷினோடு வந்த மர்ம நபர்கள்.. கும்மிடிப்பூண்டியில் ரூ. 12 லட்சம் கொள்ளை!




முகத்தில் தீயால் எரித்து கருப்பு கிரீஸ் பூச்சு
மேலும், அவரது முகம் முழுவதும் தீயினால் எரிக்கப்பட்டது போன்று கருப்பு கிரீஸ் பூசப்பட்டிருந்தது. மேலும், அவர் அணிந்திருந்த தாலி செயின் மற்றும் கம்மல் உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் அப்படியே இருந்தன. இதனால், அவரை கொலை செய்ததற்கு வேறு காரணங்கள் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், சம்பவ இடத்தில் கிடந்த செல்போனையும் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். அந்த செல்போன் எண்ணில் கடைசியாக தொடர்பு கொண்ட நபர்கள் மற்றும் அருணா வேறு யார் யாரை தொடர்பு கொண்டு உள்ளார் என்பன உள்ளிட்ட விவரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர்.
திருவள்ளூரில் அடுத்தடுத்து 3 கொலை சம்பவங்கள்
இதில், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தார். கடம்பத்தூர் பகுதியில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார். தற்போது, பெண் ஒருவர் ஆசிட் வீசி கொலை செய்யப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: மதுரையில் அதிர்ச்சி.. தவறாக நடக்க முயன்ற மகனை கொன்று புதைத்த தாய்.. 3 மாதங்களுக்கு பின் அம்பலமான உண்மை!