பயணிகள் கவனத்துக்கு.. செங்கோட்டை ரயில்கள் சேவையில் திடீர் மாற்றம்.. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Sengottai Train Cancelled : தென்காசி மாவட்டத்தில் மேம்பால பணிகள் நடைபெற இருப்பதால் நாளை ஆகஸ்ட் 29- ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு செங்கோட்டை செல்லும் ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது .
தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசையில் இருந்து குற்றாலம் செல்லும் சாலையின் குறுக்கே தென்காசி- செங்கோட்டை ரயில் பாதை மற்றும் ரயில்வே கேட் அமைந்துள்ளது. ரயில் வரும் வேளைகளில் இந்த கேட் அடைக்கப்படும் போது, அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்ப்பதற்காக தமிழக அரசு மற்றும் ரயில்வே துறை சார்பில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மாநில நெடுஞ்சாலைத்துறை மேம்பாலம் கட்டும் பணிகளை முடித்துள்ளது. ஆனால், தண்டவாளத்துக்கு மேல் உள்ள பகுதியில் மட்டும் ரயில்வே துறையால் பாலம் இணைக்கப்படாமல் உள்ளது. இந்த பணிகளை மேற்கொள்வதற்காக ரயில்வே ஒப்பந்த நிறுவனம் இரும்பு தூண்களை அந்த பகுதியில் வரிசையாக இறக்கி வைத்துள்ளது.
செங்கோட்டை செல்லும் ரயில்கள் பகுதி ரத்து
இந்த தூண்கள் பகுதி பகுதியாக ஒன்றாக இணைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. இதனை கான்கிரீட் தூண்கள் மீது வைத்து இணைத்து கான்கிரீட் போடும் பணி நாளை சனிக்கிழமை ஆகஸ்ட் 29- ஆம் தேதி தொடங்கி 31- ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தென்காசி முதல் செங்கோட்டை இடையே மேற்கண்ட 3 நாட்களுக்கு சில ரயில்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2:20 மணிக்கு புறப்படும் ( வண்டி எண்- 56776) செங்கோட்டை- திருநெல்வேலி பாசஞ்சர் ரயில் செங்கோட்டை- தென்காசி இடையே பகுதி அளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சிசிடிவி கேமராவில் ஸ்பிரே.. வெல்டிங் மெஷினோடு வந்த மர்ம நபர்கள்.. கும்மிடிப்பூண்டியில் ரூ. 12 லட்சம் கொள்ளை!




நெல்லை- செங்கோட்டை பாசஞ்சர் ரயில். . .
இந்த ரயிலானது தென்காசி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். இதே போல, திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் காலை 9:50 மணிக்கு புறப்படும் ( வண்டி எண்- 56773) திருநெல்வேலி- செங்கோட்டை பாசஞ்சர் ரயில் தென்காசி- செங்கோட்டை இடையே பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயிலானது தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் காலை 7:25 மணிக்கு புறப்படும் செங்கோட்டை பாசஞ்சர் ரயில் ( வண்டி எண்- 56771) தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும்.
மதுரை- செங்கோட்டை பாசஞ்சர் ரயில்
இதே போல, செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 12:20 மணிக்கு புறப்படும் மதுரை பாசஞ்சர் ரயில் ( வண்டி எண் 56772) செங்கோட்டை- தென்காசி இடையே பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலானது தென்காசியில் இருந்து வழக்கமாக 12:33 மணிக்கு மதுரைக்கு புறப்பட்டு செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: மதுரையில் அதிர்ச்சி.. தவறாக நடக்க முயன்ற மகனை கொன்று புதைத்த தாய்.. 3 மாதங்களுக்கு பின் அம்பலமான உண்மை!