“வாயிலேயே வடை சுடாதீங்க!”.. இருபக்க உறுப்பினர்களையும் கடிந்துக்கொண்ட சபாநாயகர்.. பேரவையில் நடந்தது என்ன?
TN Assembly Heated Debate: தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினர்களுக்கு இலவச கார் வழங்கும் திட்டம் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் நிர்மல் குமார் மற்றும் அமைச்சர்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது. 'வாயிலேயே வடை சுடாதீங்க' என்ற வார்த்தைப் பிரயோகத்தால் அவையில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், பேரவைத் தலைவர் தலையிட்டு விவாதத்தைச் சீர்செய்தார்.
சென்னை, ஆகஸ்ட் 29: தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு கொள்கை முடிவுகள் குறித்து விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கும் அறிவிப்பு மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக அவையில் எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான காரசார விவாதம் ஏற்பட்டது. சங்க இலக்கியமான புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டித் தொடங்கிய இந்த விவாதம், அவையில் பெரும் சலசலப்பை உருவாக்கியது.
மேலும் படிக்க: முதல்வர் விஜய்யின் புழல் சிறை ஆய்வு சாதாரணமாக இருந்து விடக்கூடாது… தவாக வேல்முருகன் வலியுறுத்தல்!
வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்:
விவாதத்தில் முதலாவதாகப் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர் மார்கண்டேயன், புறநானூற்றின் 204-வது பாடலான ‘ஈயென இறத்தல் இழிந்தன்று…’ என்ற வரிகளைக் குறிப்பிட்டுப் பேசினார். சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்காமலேயே முதலமைச்சர் அவர்களுக்குக் கார் வழங்குவதாக அறிவித்துள்ளார் என்றும், ஆனால் விவசாயிகள் கடன் தள்ளுபடி, மீனவர்களுக்குத் தர வேண்டிய நிவாரண நிதி போன்ற மக்கள் நலத் திட்டங்கள் இன்னும் முழுமையாகச் சென்றடையவில்லை என்றும் விமர்சித்தார். “தேர்தல் நேரத்தில் வாயிலேயே வடை சுடாமல், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முதன்மையான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” எனக் கடுமையான தொனியில் முன்வைத்தார்.
110 விதியின் கீழ் நிறைவேற்றம்:
இதற்குப் பதிலளித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் பிற அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கார் வழங்கும் திட்டத்தின் பின்னணியை விளக்கி காரசாரமாகப் பதிலளித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினரின் வேண்டுகோளைப் பரிசீலித்தே முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்பதை நினைவுபடுத்திய சட்டத்துறை அமைச்சர், தாசில்தார் முதல் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் வாகனங்கள் இருக்கும் போது, தொகுதி முழுக்கச் சுற்றிவந்து மக்கள் குறைகளைக் கேட்கும் எம்.எல்.ஏ-க்களுக்கும் வாகனம் அவசியம் என்பதால் மட்டுமே இது வழங்கப்பட்டது என்றார். மேலும், ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்திற்குள்ளேயே ‘வெற்றி பயணம்’ திட்டம், இலவச கேஸ் சிலிண்டர் திட்டம் எனப் பல வாக்குறுதிகளை 110-விதியின் கீழ் முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார் என்றும் சுட்டிக்காட்டினர். அதோடு, “நீங்கள் எல்லாம் தொகுதிப் பக்கமே போவதில்லை, தொகுதியைச் சுற்றிப் பார்ப்பதில்லை” என்றும், “உங்களுக்கு 5 கார், 6 கார் இருந்து என்ன பிரயோஜனம்?” என்றும் தனிப்பட்ட முறையில் விமர்சித்துப் பேசினர்.
மேலும் படிக்க: அமைச்சர் மரிய வில்சன் ஒன்றும் இங்கிலாந்து அரசர் கிடையாது.. பதவிக்கு வந்ததால் நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டாரா.. உயர்நீதிமன்றம் காட்டம்!
மக்கள் கவலைப்படும் நிலை:
விவாதத்தின் இடைமறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, எதிர்க்கட்சி உறுப்பினர் தன் தொகுதியில் மக்கள் செல்வாக்கைப் பெற்று மீண்டும் வெற்றி பெற்றவர் என்று கூறியதோடு, அவையில் இதுபோன்ற சொற்களைப் பயன்படுத்துவது முறையல்ல என்றார். விவாதம் எல்லை மீறிச் சென்றதைத் தொடர்ந்து குறுக்கிட்ட பேரவைத் தலைவர், “வாயிலேயே வடை சுடுகிறார்கள் என்ற வார்த்தை இரு பக்கமிருந்தும் வந்து அவைக்குறிப்பில் ஏறிவிட்டது. சட்டமன்றத்திற்குள் அனைவரும் வாயிலேயே வடை சுட்டுக் கொண்டிருக்கிறார்களோ என வெளியே இருக்கும் மக்கள் கவலைப்படும் நிலை உருவாகக் கூடாது; எனவே மக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து உறுப்பினர்கள் ஆரோக்கியமாகப் பேச வேண்டும்” எனக் கூறி விவாதத்தை முடித்து வைத்தார்.