முதல்வர் விஜய்யின் புழல் சிறை ஆய்வு சாதாரணமாக இருந்து விடக்கூடாது… தவாக வேல்முருகன் வலியுறுத்தல்!
Tvk Velmurugan commented CM Vijay inspection : புழல் சிறை மற்றும் புழல் காவல் நிலையத்தில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்டது சாதாரணமாக கடந்து சென்று விடக்கூடாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று புலன் மத்திய சிறை மற்றும் புழல் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டிருந்தார். இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் புழல் சிறையில் மேற்கொண்ட ஆய்வு, சிறை நிர்வாகம், உணவு, பாதுகாப்பு, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை பார்வையிட்டதோடு நின்று விடக்கூடாது. அந்த சிறையில் நீண்ட காலமாக தண்டனை அணிவித்து வரும் சிறைவாசிகளின் நிலை, அவர்களின் விடுதலை மற்றும் மறுவாழ்வு குறித்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு வழிவகை செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை, ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள இஸ்லாமிய மற்றும் அரசியல் சிறைவாசிகளை எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.
ஓய்வு பெற்ற நீதிபதி அடங்கிய சுயாதீன ஆணையம்
இத்தகைய வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக சட்ட நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும். சிறையில் உள்ளவர்களின் வழக்குகள் மற்றும் விடுதலைக்கான தகுதிகளை பாரபட்சம் இன்றி மறுபரிசீலனை செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி, சட்ட வல்லுநர், சமூக ஆர்வலர் உள்ளிட்டோர் அடங்கிய சுயாதீன மறுபரிசீலனை ஆணையம் அமைக்க வேண்டும். பல்வேறு வழக்குகளில் நீண்ட காலமாக சிறையில் இருக்கும் ஈழத் தமிழர்களின் நிலையையும் பரிசீலனை செய்ய வேண்டும். நல்லெண்ணத்தின் அடிப்படையில் அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்து வாழ அரசு வழிவகை செய்ய வேண்டும்.
மேலும் படிக்க: மு.க.ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் பரபரப்பு நோட்டீஸ்.. பின்னணியில் ஆதவ் அர்ஜூனா தொடுத்த வழக்கு.. என்ன காரணம்!
விடுதலை பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவை
வயது முதிர்ந்த சிறைவாசிகளின் உடல் நிலையை கருத்தில் கொண்டு மனிதநேய கண்ணோட்டத்தில் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்டனை நோக்கம் நிறைவேறிய பின்னரும் சிறைவாசம் நீட்டிப்பது சரியானது இல்லை. விடுதலை பெறுபவர்களுக்கு வேலை வாய்ப்பு, தொழிற்பயிற்சி, ஆலோசனை மற்றும் முழுமையான மறுவாழ்வு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். முதல்வர் விஜய் புழல் சிறையில் பார்த்த நிலைமைகள் அரசு கோப்புகளில் முடங்கிக் கிடக்கும் எண்ணிக்கைகளாக மாறிவிடக்கூடாது.
சாதாரணமான நிகழ்வாக கடந்து செல்லக்கூடாது
இவை மனிதர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் அரசின் முடிவுகளாக இருக்க வேண்டும். எனவே, புழல் சிறை ஆய்வை ஒரு வழக்கமான நிகழ்வாக கடந்து செல்லாமல், 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய மற்றும் அரசியல் சிறைவாசிகள், ஈழத் தமிழர்கள் உள்ளிட்டோரின் விடுதலைக்கான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: திமுக அலுவலகத்தில் புகுந்த மர்ம கும்பல்.. அலறி துடித்த விசிக நிர்வாகி.. அடுத்து நடந்த கொடூர சம்பவம்!