திமுக அலுவலகத்தில் புகுந்த மர்ம கும்பல்.. அலறி துடித்த விசிக நிர்வாகி.. அடுத்து நடந்த கொடூர சம்பவம்!
Chennai VCK Functionary Murder : சென்னை மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை மாவட்டம், பல்லாவரம் அருகே உள்ள திருநீர்மலை பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் என்ற மைனாக்குட்டி. இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளராக இருந்து வந்தார். இந்த நிலையில், அன்பழகன் அதே பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே உள்ள திமுக மண்டல அலுவலகத்தில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்தவாறு 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அதிவேகமாக வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் திமுக அலுவலகத்துக்குள் புகுந்து அன்பழகனை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொடூரமான முறையில் சரமாரியாக வெட்டியது. இதில், அன்பழகன் தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே, அந்த கும்பல் இருசக்கர வாகனங்களில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றது.
மர்ம கும்பல் வெட்டியதில் விசிக நிர்வாகி பலி
இந்த சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவரது சடலம் பிரேத பரிசோதனை செய்வதற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அன்பழகன் பெற்றோர் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும் படிக்க: திருவள்ளூரில் கொடூரம்.. ஆந்திர பெண் கழுத்து நெறித்து கொலை.. முகத்தில் ஆசிட் ஊற்றி அடையாளம் அழிக்க முயற்சி!
சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். அதில், மர்ம கும்ப கும்பலின் உருவம் பதிவாகி இருப்பதாகவும், அவர்கள் வந்த இரு சக்கர வாகனங்களின் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களின் அடிப்படையில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக விசிக நிர்வாகி கொலை
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், படுகொலை செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி அன்பழகன் மீது 3 கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இதில், ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் விசிக நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: 27 வழக்குகள்… 6 கொலைகள்.. தூத்துக்குடி துப்பாக்கி செல்வம் கொடூர கொலை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மர்ம கும்பல்!