AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“தமிழ்நாட்டிலிருந்து 400 பேர் நேபாளம் பயணம்!”.. டெல்லி வார் ரூமிலிருந்து அமைச்சர் ராஜ்மோகன் தந்த அதிர்ச்சி தகவல்!!

Stranded Tamils in Nepal: நேபாள வெள்ளத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 400 பேர் சிக்கியிருக்கலாம் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு வார் ரூம் அமைக்கப்பட்டு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் இந்தியத் தூதரகத்துடன் இணைந்து மீட்புப் பணிகள் அதிவிரைவாக நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.

“தமிழ்நாட்டிலிருந்து 400 பேர் நேபாளம் பயணம்!”.. டெல்லி வார் ரூமிலிருந்து அமைச்சர் ராஜ்மோகன் தந்த அதிர்ச்சி தகவல்!!
அமைச்சர் ராஜ்மோகன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 29 Aug 2026 07:13 AM IST

அண்டை நாடான நேபாளத்தில் அண்மையில் பெய்த கனமழை காரணமாகப் பெரும் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டுப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த இயற்கை பேரிடரின் போது தமிழ்நாட்டிலிருந்து நேபாளத்திற்குச் சுற்றுப்பயணம் மற்றும் ஆன்மீகச் சுற்றுலா சென்ற ஏராளமான தமிழர்கள் அங்கு ஆங்காங்கே சிக்கித் தவித்து வருகின்றனர். நிலச்சரிவு மற்றும் பாலங்கள் சேதமடைந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, தொடர்பு கொள்ள முடியாத நிலையில் தவிக்கும் தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்கத் தமிழ்நாடு அரசு தீவிர போர்க்கால நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

இதையும் படிக்க: நேபாள வெள்ளத்தில் சிக்கிய 21 தமிழர்கள்.. காத்மண்டுவில் இருந்து விமானம் மூலம் பாதுகாப்பாக சென்னை வருகை!

முகாமிட்ட தமிழக அமைச்சர்கள்:

மீட்புப் பணிகளை நேரடியாக ஒருங்கிணைப்பதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு அமைச்சர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர் ராஜ்மோகன், நேபாளத்தில் தவிக்கும் தமிழர்களின் தற்போதைய நிலவரம் குறித்து விரிவான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதன்படி, தமிழ்நாட்டிலிருந்து சுற்றுப்பயணத் திட்டங்கள் (Tour Packages) மூலமாகவும், தனியாகவும், சிறிய குழுக்களாகவும் நேபாளத்திற்குப் பயணம் மேற்கொண்டவர்களின் தகவல்களைச் சேகரித்ததில், சற்றொப்ப 400 பேர் வரை அங்குச் சென்றிருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. இவர்களில் பெரிய நிறுவனங்கள் மூலம் சென்றவர்களைத் தவிர, ரயில் மூலமாகவும் சொந்த ஏற்பாட்டிலும் சிறிய குழுக்களாகச் சென்ற பலரது தகவல்கள் தற்போதுதான் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மீட்புப் பணிகள் துரிதம்:

பாதிக்கப்பட்டவர்களைத் தேடிக் கண்டுபிடித்து மீட்பதற்காக டெல்லியிலுள்ள ‘தமிழ்நாடு இல்லத்தில்’ பிரத்யேகக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருகிறது. மீட்புப் பணிகளை வேகப்படுத்த டெல்லியில் உள்ள மத்திய வெளியுறவுத் துறைச் செயலாளரையும் நேரில் சந்தித்து விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், மத்திய அரசு அமைத்துள்ள கட்டுப்பாட்டு மையத்துடனும் தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் குழு தொடர் தொடர்பில் இருந்து தகவல்களைப் பரிமாறிக்கொண்டு வருகிறது.

90 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை:

தற்போதைய நிலவரப்படி, கண்டறியப்பட்ட குழுக்களில் 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் 140-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை மாற்றுச் சாலை வழியாகக் காத்மாண்டுவிற்கு அழைத்து வந்து, அங்கிருந்து டெல்லிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதேவேளையில், சுமார் 90-க்கும் மேற்பட்டோரைத் தொடர்புகொள்ள முடியாத நிலை நீடித்து வருகிறது. அவர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை வைத்து அவர்களை அடையாளம் காணும் பணி மத்திய-மாநில அரசு அதிகாரிகளால் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க: தமிழக அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு.. யாருக்கெல்லாம் தெரியுமா.. கவர்னர் காட்டிய பச்சைக் கொடி!

தாயகம் அழைத்து வர உரிய நடவடிக்கை:

வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ வசதிகளை வழங்குவதோடு, அவர்களை வான்வழியாகவும் தரைவழியாகவும் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வரத் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எவ்வித தாமதமும் இன்றித் தரவுகள் பரிமாறப்பட்டு மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதால், நேபாளத்தில் உள்ள தமிழர்கள் விரைவில் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us