அதிகாலையிலேயே கொடூரம்.. கார் டயர் வெடித்து விபத்து.. பரிதாபமாக பறிபோன 4 உயிர்!
Chengalpattu Car Accident Dies : செங்கல்பட்டு மாவட்டத்தில் காரின் டயர் வெடித்த விபத்தில் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4 மாணவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் வேல்ஸ் கல்லூரியில் பயின்று வரும் 7 மாணவர்கள் வார இறுதி நாளையொட்டி பொழுதை கழிப்பதற்காக புதுச்சேரிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். அதன்படி, அவர்கள் ஒரு காரில் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்று விட்டு அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு நேற்று வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் சென்னைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அவர்களது கார் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, திடீரென காரின் பின் பக்க டயர் வெடித்து சிதறியது. இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில், கார் அப்பளம் போல நொறுங்கியது. காரில் உள்ளே பயணித்த 7 மாணவர்களும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: திமுக அலுவலகத்தில் புகுந்த மர்ம கும்பல்.. அலறி துடித்த விசிக நிர்வாகி.. அடுத்து நடந்த கொடூர சம்பவம்!
கல்லூர் மாணவர்கள் 3 பேர் பரிதாப பலி
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள அரசு செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில், ராஜ் பிரசாத், டியூட்டரின், தீபக் ஆகிய 3 மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற 4 மாணவர்கள்களான லோகேஸ்வரன், ஹரி கிருஷ்ணன், முனீஸ்வரன், ராம் பிரசாத் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
உயிரிழந்த 3 மாணவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்தில் உயரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. இதனிடையே, இந்த விபத்து தொடர்பாக உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர் மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொடூர விபத்தின் காரணமாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலைகள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார் விபத்தில் சிக்கிய காரை மீட்டு போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்ற மீட்பு பணியில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.
மேலும் படிக்க: விசிக நிர்வாகி படுகொலை சம்பவம்.. 5 பேரை தட்டி தூக்கிய தனிப்படை? ரகசிய இடத்தில் வைத்து விசாரணை!