ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. கைவிரல் ரேகை பதிவு செய்ய இன்று சிறப்பு முகாம்.. முழு விவரம்..
Ration Shop - Special Camp: கைவிரல் ரேகை சரிபார்ப்புப் பணியை 100 சதவீதம் நிறைவு செய்யும் வகையில், இன்று (ஆகஸ்ட் 29) தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
ஆகஸ்ட் 29, 2026: ரேஷன் அட்டையில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்யும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று (ஆகஸ்ட் 29) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுவரை கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்கள், இந்த முகாமைப் பயன்படுத்தி தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ரேஷன் அட்டை முக்கியமான ஆவணமாகக் கருதப்படுகிறது.
இதன் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பொருட்களின் அளவு மாறுபடும்.
அதேபோல், ரேஷன் அட்டை அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கான ஆவணம் மட்டுமின்றி, அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் பேரிடர் காலங்களில் வழங்கப்படும் நிவாரணங்களைப் பெறுவதற்கும் முக்கிய ஆவணமாகப் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் படிக்க: விசிக நிர்வாகி படுகொலை சம்பவம்.. 5 பேரை தட்டி தூக்கிய தனிப்படை? ரகசிய இடத்தில் வைத்து விசாரணை!
கைவிரல் ரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம்:
இந்த நிலையில், குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களின் கைவிரல் ரேகையையும் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டைகளில் ஆதார் விவரங்களைச் சரிபார்ப்பதற்காக, மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பயனாளிகளிடமும் கைவிரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, குடும்ப உறுப்பினர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் கைவிரல் ரேகை சரிபார்ப்புப் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகை சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: அதிகாலையிலேயே கொடூரம்.. செங்கல்பட்டில் கார் டயர் வெடித்து விபத்து.. பரிதாபமாக பறிபோன 4 உயிர்!
96.21% பணிகள் நிறைவு:
தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை ரேஷன் அட்டைகளில் 96.21 சதவீதம் கைவிரல் ரேகை சரிபார்ப்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைவிரல் ரேகை சரிபார்ப்புப் பணியை 100 சதவீதம் நிறைவு செய்யும் வகையில், இன்று (ஆகஸ்ட் 29) தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
எனவே, இதுவரை ரேஷன் கடைகள் மூலம் கைவிரல் ரேகை பதிவு செய்யப்படாமல் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள், தங்கள் பகுதியில் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்தி கைவிரல் ரேகையை பதிவு செய்து கொள்ளுமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.