நேபாளத்தில் வரலாறு காணாத பேரிடர்.. 600-ஐ கடந்த பலி எண்ணிக்கை.. மாயமான ஆயிரக்கணக்கானோர் நிலை என்ன?
Nepal Flash Flood 2026: நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் அமைந்த போதே கோஷி ஆற்றுப் படுகையில் திடீரென ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 600-ஐக் கடந்து உயர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை. ராசுவா, நுவாகோட் ஆகிய மாவட்டங்களில் பாலங்கள், கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களும் மீட்புக் குழுவினரும் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேபாளம் மற்றும் திபெத் எல்லைக்கு உட்பட்ட இமயமலைப் பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் பனிப்பாறைச் சரிவு காரணமாக போதே கோஷி மற்றும் திரிசூலி ஆற்றுப் படுகைகளில் திடீரெனப் பேரழிவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த விபரீத இயற்கைச் சீற்றத்தால் கரைபுரண்டு வந்த வெள்ள நீர், அப்பகுதியில் உள்ள கிராமங்கள், சந்தைப் பகுதிகள், பாலங்கள் மற்றும் முக்கியக் கட்டடங்களை அடித்துச் சென்று பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. திடீரெனப் பாய்ந்த வெள்ள வெள்ளப் பெருக்கால் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். நேபாள வரலாற்றில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த வெள்ளப் பெருக்கில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: Watch Video: நேபாள வெள்ளப்பெருக்கு.. சிக்கிய ஒற்றை வீடு – தப்பிய உயிர்கள்.. பதைபதைக்க வைக்கும் காட்சி..
பலி எண்ணிக்கை உயர்வு:
தற்போதைய நிலவரப்படி, வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600-ஐத் தாண்டி உயர்ந்துள்ளது. அதே சமயம் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என அஞ்சப்படுவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ராசுவா மாவட்டத்திற்கு உட்பட்ட திமூரே, சியாப்ருபேசி மற்றும் நுவாகோட் ஆகிய பகுதிகள் வெள்ளத்தின் கொடூரத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. குடியிருப்புகள், நீர்மின் நிலையத் திட்டப் பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் சேதமடைந்து அப்பகுதிகள் நாட்டின் பிற இடங்களிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் படையினரின் மீட்பு நடவடிக்கை:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்கும் நோக்கில் நேபாள அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளைத் முடுக்கிவிட்டுள்ளது. நேபாள ராணுவம், ஆயுதப் படை மற்றும் நேபாள காவல்துறை ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 14,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் மீட்புக் குழுவினர் இடிபாடுகளிலும் வெள்ள நீரிலும் சிக்கிய ஆயிரக்கணக்கானோரைப் பாதுகாப்பாக மீட்டு தற்காலிக முகாம்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். மேலும், நிலச்சரிவு காரணமாக உருவான தற்காலிக இயற்கை அணைகள் உடைந்து மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பாடும் அபாயம் நிலவுவதால், ஆற்றங்கரை ஓரங்களில் வாழும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு நேபாள பேரிடர் நிர்வாக அமைப்பு எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க: நேபாள வெள்ளத்தில் சிக்கிய 290 இந்தியர்கள்; தமிழகத்தைச் சேர்ந்த 86 பேர் மாயம்
இந்தியாவின் உதவி மற்றும் சர்வதேசக் கவலைகள்
இப்பேரழிவில் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் தொழிலாளர்கள் பலரும் சிக்கியுள்ள நிலையில், அவர்களைப் பாதுகாப்பாக மீட்டெடுக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள், மருத்துவக் குழுக்கள் மற்றும் சுரங்கப்பாதை மீட்புக் குழுவினருடன் கூடிய சிறப்பு விமான கட்டங்கள் காட்மாண்டுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, திடீர் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட சுமார் 17,000 குழந்தைகள் உட்பட 90,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு உடனடி உணவு, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை கவலை தெரிவித்துள்ளன. நிலைமை தொடர்ந்து சீரடைய சில வாரங்கள் ஆகும் என்பதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.