பிரதமர் வேட்பாளர் சர்ச்சை விவகாரம்… முதல்வர் விஜய்யுடன் மாணிக்கம் தாகூர் திடீர் சந்திப்பு.. பின்னணி என்ன!
Manickam Tagore Meet CM Vijay : நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யுடன், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீண் சக்கரவர்த்தி எம்பி சந்தித்தனர்.
இந்தியாவில் 2029 மக்களவைத் தேர்தலில் நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக எழுந்து வருகிறது. இதில், தமிழகத்தின் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தான் அடுத்த பிரதமர் என்று அந்த கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, தனியார் நிறுவனம் சார்பில் இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதில், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரிசையில் தமிழக முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் 3- ஆவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக வெற்றி கழகத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே கருத்து மோதல் எழுந்து வருகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜயை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் காங்கிரஸ் எம்பி பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் இன்று திடீர் சந்தித்துள்ளனர்.
முதல்வர் விஜய் – மாணிக்கம் தாகூர் திடீர் சந்திப்பு
சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் சந்தித்த அவர்கள் நீண்ட நேரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வியும், அதற்கு தமிழக முதல்வர் விஜய் தான் அடுத்த பிரதமர் என்ற தவெகவினர் பதிலும் எழுந்து வரும் நிலையில், இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு மேடையில் பேசிய காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார், நாட்டின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் விலகல்




தவெக அமைச்சரவையிலிருந்து காங்கிரஸ் வெளியேறும்
அத்துடன், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தமிழக வெற்றி கழகம் ஏற்கவில்லை எனில், தமிழக அமைச்சர் அவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர்கள் இருவரும் வெளியேறுவார்கள் என்று பகிரங்கமாக பேசி இருந்தார். இந்த பேச்சு, தவெக, காங்கிரஸ் கூட்டணியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் வேட்பாளர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்கம் தாகூர், தவெகவினர் ரசிகர் மனப்பான்மையில் இருந்து இன்னும் வெளிவரவில்லை என்று தெரிவித்திருந்தார்.
தவெக சார்பில் மறுப்பு தெரிவிக்கவில்லை
அதோடு, தவெகவினர் கூறுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். சமூகவலைதளங்களில் அடுத்த பிரதமர் விஜய் தான் என்று தகவல் பரவி வரும் நிலையில், இதனை மறுத்தோ அல்லது விளக்கம் அளித்தோ எந்த கருத்தையும் தற்போது வரை முதல்வர் விஜய் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் தெரிவிக்கவில்லை.
மேலும் படிக்க: பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு.. முதல்வர் விஜய் அறிவிப்பு