மின்சார வாகனம் முதல் உதவித்தொகை உயர்வு வரை.. மாற்றுத்திறனாளிகளுக்கு வெளியிடப்பட்ட 9 முக்கிய அறிவிப்புகள்..
தனித்து செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள், UDID அட்டையைப் பயன்படுத்தி தங்களுடன் ஒரு துணையாளருடன் மாநகர அல்லது நகரப் பேருந்துகள், விரைவுப் பேருந்துகள், டீலக்ஸ், புறநகர் மற்றும் மலைப்பகுதி பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில் இலவசப் பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 31, 2026: இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 9 புதிய அறிவிப்புகளை அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவை ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு துறை ரீதியான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது. மேலும் அந்தந்த துறை சார்ந்த அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இன்றைய பேரவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் கீழ்வருமாறு.
மாற்றுதிறனாளிகளுக்காக 9 அறிவிப்புகள்:
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய மின்சார வாகன உதவி
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய மின்சார வாகன உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இயங்கும் உபகரணங்கள்
உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளின் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பெட்ரோல் அல்லது மின்சாரத்தில் இயங்கும் உபகரணங்கள் வழங்கப்படும். இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு 10 இல்லங்கள்
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசு நிதியுதவியுடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் 10 இல்லங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.1.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 தொழிற்பயிற்சி இல்லங்கள்
அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்கப்படும். இதற்காக ரூ.1.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு 2 இல்லங்கள்
முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக அரசு நிதியுதவியுடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் 2 இல்லங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 6 பயிற்சி மையங்கள்
அறிவுசார் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 3 பயிற்சி மையங்கள், செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கு 2 பயிற்சி மையங்கள், பார்வை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 1 பயிற்சி மையம் என மொத்தம் 6 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.97 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 இல்லங்கள்
கடலூரில் 100 பேர் பயன்பெறும் வகையில் 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் 2 இல்லங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: செப்டம்பர் 6ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.. வெப்பநிலை எப்படி இருக்கும்?
அரசுப் பேருந்துகளில் இலவச பயணத் திட்டம் விரிவாக்கம்
தனித்து செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள், UDID அட்டையைப் பயன்படுத்தி தங்களுடன் ஒரு துணையாளருடன் மாநகர அல்லது நகரப் பேருந்துகள், விரைவுப் பேருந்துகள், டீலக்ஸ், புறநகர் மற்றும் மலைப்பகுதி பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில் இலவசப் பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு மெய்நிகர் கற்றல்
செவித்திறன் குறைபாடுடைய மாணவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் மெய்நிகர் கற்றல் முறையில் கல்வி கற்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.64 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: செப்டம்பர் 6ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.. வெப்பநிலை எப்படி இருக்கும்?
பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை உயர்வு
பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாடத்திட்டங்களைப் படிக்க உதவும் வாசிப்பாளர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தப்பட உள்ளது. தற்போது 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.3,000, இளங்கலைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூ.5,000, தொழில்கல்வி மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூ.6,000 என உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2026-27ஆம் ஆண்டு முதல் வாசிப்பாளர் உதவித்தொகை மேலும் உயர்த்தப்படும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவித்துள்ளார்.