நாகப்பட்டினத்தில் திருமணமான 4 மாதத்தில் அதிர்ச்சி.. மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் விபரீதம்.. நள்ளிரவில் புதுமாப்பிள்ளை எடுத்த அதிர்ச்சி முடிவு!
Nagapattinam Crime : நாகப்பட்டினத்தில் திருமணமான 4.5 மாதத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் புது மாப்பிள்ளை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக நாகூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் அருகே உள்ள தெற்கு பால் பண்ணைச்சேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நெடுஞ்செழியன். இவருக்கு கஜேந்திரன் ( வயது 26) என்ற மகனும், ஒரு மகளுன் உள்ளனர். கஜேந்திரன், ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 4.5 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அவரது தங்கைக்கு பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து வந்த நிலையில், திருமணம் பேசி முடிக்கப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை ( ஆகஸ்ட் 30- ஆம் தேதி) திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு கஜேந்திரனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், கஜேந்திரன் கடும் மன வேதனை அடைந்ததாகவும், அந்த வேதனையில் அறையில் உள்ளே சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டதாக தெரிகிறது.
வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த புதுமாப்பிள்ளை
அவரது மனைவியும் கோபத்தில் மற்றொரு அறையில் படுத்து தூங்கி உள்ளார். பின்னர், மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, கஜேந்திரனின் அரை கதவு திறக்காமல் இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த அவரது மனைவி கதவை தட்டிப் பார்த்தும் திறக்கப்படவில்லை. உடனடியாக அக்கம் பக்கத்தினரிடம் இது தொடர்பாக அவரது மனைவி கூறிய நிலையில் அவர்கள் உடனடியாக வீட்டுக்கு வந்து கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர். அப்போது, கஜேந்திரன் வீட்டின் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.
மேலும் படிக்க: பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு.. முதல்வர் விஜய் அறிவிப்பு




நாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை
இதை தொடர்ந்து அருகில் உள்ள நாகூர் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கஜேந்திரனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கஜேந்திரன் பெற்றோர் நாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகம்
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கணவன், மனைவி தகராறில் கஜேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருந்தாலும், அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகூர் பகுதியில் திருமணமான 4.5 மாதங்களில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எண்ணத்தை தவிர்க்க
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)
மேலும் படிக்க: திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் விலகல்