கோவை, நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சிலிண்டர்கள்.. 40 தகர கொட்டகைகள் தீக்கிரை!
கோவை, நவ இந்தியா பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றின் சார்பில் 40-க்கும் மேற்பட்ட தகரக் கொட்டகைகள் அமைக்கப்பட்டு, அதில் 500-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கிப் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இன்று தொழிலாளர்கள் வழக்கம் போல் பணிக்குச் சென்று இருந்த நேரத்தில், ஒரு கொட்டகையில் வைக்கப்பட்டு இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்துச் சிதறியது.
கோவை, நவ இந்தியா பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றின் சார்பில் 40-க்கும் மேற்பட்ட தகரக் கொட்டகைகள் அமைக்கப்பட்டு, அதில் 500-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கிப் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இன்று தொழிலாளர்கள் வழக்கம் போல் பணிக்குச் சென்று இருந்த நேரத்தில், ஒரு கொட்டகையில் வைக்கப்பட்டு இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்துச் சிதறியது. இந்த தீ கணநேரத்தில் அடுத்தடுத்த கொட்டகைகளுக்கும் பரவியதால், அங்கு வைக்கப்பட்டு இருந்த மேலும் 6 சிலிண்டர்கள் வரிசையாக வெடித்துச் சிதறின. மொத்தம் 7 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்துத் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அப்பகுதி முழுதும் அடர்ந்த புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.
தகவல் அறிந்தவுடன் பீளமேடு மற்றும் கோவை தெற்கு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 4 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தகர கொட்டகைகளை உடைத்து, பல மணி நேரம் போராட்டத்திற்குப் பின் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்து நடந்த நேரத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்குச் சென்று இருந்ததாலும், அங்கு இருந்த சிலர் உடனடியாக வெளியேறியதாலும் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித உயிர்ச்சேதமும் அல்லது காயமும் ஏற்படவில்லை என காவல் துறையினரும் தீயணைப்புத் துறையினரும் உறுதிப்படுத்தி உள்ளனர்.
