நள்ளிரவில் பகீர் சம்பவம்.. நாமக்கல்லில் கணவன்-மனைவியை கட்டிப்போட்டு 40 பவுன் நகை- ரூ.40 லட்சம் கொள்ளை!
Namakkal 40 Sovereign Looted : நாமக்கல் மாவட்டத்தில் நள்ளிரவில் வீட்டின் உள்ளே நுழைந்த மர்ம கும்பல் கணவன், மனைவியை கட்டி போட்டு பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 40 லட்சத்தை கொள்ளை அடித்து சென்றது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பிலிக்கல் பாளையம் அருகே உள்ள சினிமா கொட்டகை மேடு பகுதியில் இருந்து சின்னமருதூர் செல்லும் சாலை அமைந்துள்ளது. இதன் அருகே வசித்து வருபவர் வைரவன் ( 60 வயது). இவர், வெல்லம் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சுமதி ( 55 வயது). தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். வைரவன் மற்றும் அவரது மனைவி சுமதி ஆகியோர் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் முகமூடி அணிந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் வைரவனின் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றது. வீட்டின் மொட்டை மாடிக்கு சென்ற அந்த கும்பல், முதல் மாடியில் உள்ள அறைகளில் பார்த்ததில் எந்த பொருட்களும் கிடைக்கவில்லை.
கணவன்- மனைவியை கட்டிப் போட்டு 40 பவுன் நகை கொள்ளை
தொடர்ந்து, கீழ்ப்பகுதியில் உள்ள வீட்டின் கதவை மெதுவாக உடைத்து உள்ளே சென்றது. அப்போது, கதவு உடைக்கும் சத்தம் கேட்ட வைரவன் மற்றும் அவரது மனைவி எழுந்து வந்த நிலையில், அவர்களை மர்ம நபர்கள் கட்டி போட்டனர். தொடர்ந்து, அவர்களிடம் பணம் மற்றும் நகை எங்கே என்று மிரட்டினர். இதற்கு பதில் அளிக்காததால் வைரவனை அந்த கும்பல் கத்தியால் வெட்டியது. தொடர்ந்து, வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 40 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.40 லட்சம் ரொக்கத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றது.
மேலும் படிக்க: ஊட்டி அருகே இரவில் குடியிருப்பு பகுதியில் புகுந்த கரடி.. பொதுமக்கள் அச்சம்..




தடயங்களை சேகரித்த போலீசார்
இது தொடர்பாக, வைரவன் ஜோடர்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் பரமத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொள்ளை சம்பவம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டவர். தொடர்ந்து, விரல் ரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. டிஎஸ்பி வெண்ணிலா உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
இது தொடர்பாக வைரவன் ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் சங்கர பாண்டியன் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.
மேலும் படிக்க: வரதட்சணை கொடுமையால் பரிதாபம்.. கை குழந்தையை தவிக்கவிட்டு தாய் விபரீத முடிவு.. சென்னையில் சோகம்!