வரதட்சணை கொடுமையால் பரிதாபம்.. கை குழந்தையை தவிக்கவிட்டு தாய் விபரீத முடிவு.. சென்னையில் சோகம்!
Chennai Dowry Harassment Case: சென்னை ஈச்சங்கரணையைச் சேர்ந்த புவனேஸ்வரி, வரதட்சணை கொடுமை காரணமாக பள்ளிக்கரணையில் உள்ள தாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்தின் போது வாக்குறுதி அளித்தபடி 200 சவரன் நகை தராததால் கணவர் மற்றும் உறவினர்கள் மன உளைச்சல் அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து கோட்டாட்சியர் விசாரணை நடந்து வருகிறது.
சென்னை, ஆகஸ்ட் 31: சமூகத்தில் வரதட்சணை கொடுமைகளுக்கு எதிராக பல்வேறு விழிப்புணர்வுகளும் கடும் சட்டங்களும் நடைமுறையில் இருந்தாலும், வரதட்சணை பேய் இன்னும் பல இளம் பெண்களின் உயிரைப் பறித்து வருகிறது. அந்தவகையில், சென்னை பள்ளிக்கரணையில் ஒரு வயது குழந்தைக்குத் தாயான இளம் பெண் ஒருவர் வரதட்சணை கொடுமை காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் தொடர் மன உளைச்சலே இந்த முடிவுக்குக் காரணம் என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிக்க: “ராகுலா.. விஜய்யா?”.. பிளவுபடும் தவெக கூட்டணி.. ராஜினாமா எச்சரிக்கையால் கிளம்பிய புதுப் புயல்!!
வரதட்சணை கொடுமையால் நேர்ந்த கோரம்:
சென்னை ஈச்சங்கரணை பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவரின் மனைவி புவனேஸ்வரி. திருமணத்தின் போது பேசுபடி 200 சவரன் நகை தருவதாக புவனேஸ்வரியின் வீட்டார் வாக்குறுதி அளித்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சூழ்நிலை காரணமாகக் கூறியபடி நகையைக் கொடுக்க முடியாத நிலையில், அது தொடர்பாக ஜானகிராமனும் அவரது குடும்பத்தினரும் புவனேஸ்வரியைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
தாய் வீட்டில் நடந்த துயரம்:
கணவர் வீட்டின் தொடர் வரதட்சணை தொல்லை மற்றும் மன உளைச்சல் காரணமாக, புவனேஸ்வரி தனது ஒரு வயது குழந்தையுடன் பள்ளிக்கரணை அருகே உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். அங்குச் சில நாட்கள் இருந்த நிலையில், சம்பவத்தன்று மாலையில் வழக்கம்போல் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்ட புவனேஸ்வரி, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உறவினர்கள் சரமாரி குற்றச்சாட்டு:
தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புவனேஸ்வரியின் தற்கொலைக்குக் காரணமான ஜானகிராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் பள்ளிக்கரணை காவல் நிலையம் முன் திரண்டு கண்ணீர்மல்க நீதி கோரினர். திருமணமாகி சில ஆண்டுகளே ஆவதாலும், வரதட்சணை புகார் உள்ளதாலும் இச்சம்பவம் குறித்து கோட்டாட்சியர் (RDO) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்… ஏற்காவிட்டால் அமைச்சரவையை விட்டு வெளியேறுவோம்… அமைச்சர் பரபரப்பு கருத்து
காவல் நிலையம் முற்றுகை:
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்த புவனேஸ்வரியின் சடலம் உடற்கூறாய்விற்காகத் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேவேளையில், தற்கொலைக்குத் தூண்டிய கணவர் ஜானகிராமன் மற்றும் அவரது குடும்பத்தினரை உடனடியாகக் கைது செய்யக் கோரி உயிரிழந்த பெண்ணின் உறவினர்களும் கிராம மக்களும் பள்ளிக்கரணை காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் மீது வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாகக் காவல் துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050).