“ராகுலா.. விஜய்யா?”.. பிளவுபடும் தவெக கூட்டணி.. ராஜினாமா எச்சரிக்கையால் கிளம்பிய புதுப் புயல்!!
TVK Congress Alliance Rift: 2029 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்கத் தமிழக வெற்றிக்கழகம் முன்வராவிட்டால், தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரு காங்கிரஸ் அமைச்சர்களும் உடனடியாகப் பதவி விலகுவார்கள் என அமைச்சர் ராஜேஷ்குமார் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் தவெக - காங்கிரஸ் கூட்டணியில் முரண்பாடுகளும் பிளவுகளும் தீவிரமடைந்துள்ளன.
சென்னை, ஆகஸ்ட் 31: தமிழ்நாடு அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியமைப்பும், அதன் தோழமைக் கட்சிகளுடனான அதிகாரப் பகிர்வும் தொடர்ந்து பல்வேறு திருப்பங்களைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, தவெக அரசு அமைந்ததிலிருந்து அதில் கூட்டணி பங்காளியாக இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கும் தவெகவிற்கும் இடையே அகில இந்திய அரசியல் மற்றும் எதிர்கால நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அணுகுமுறைகளில் முரண்பாடுகள் நீடித்து வருகின்றன. இத்தகைய சூழலில், வரும் 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டின் பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்பது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே மிகப்பெரிய அரசியல் மோதல் வெடித்துள்ளது.
இதையும் படிக்க: ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்… ஏற்காவிட்டால் அமைச்சரவையை விட்டு வெளியேறுவோம்… அமைச்சர் பரபரப்பு கருத்து
காங்கிரஸ் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை:
2029 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் சார்பில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் எனத் தவெக ஆட்சியில் அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜேஷ்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஆனால், தவெகவைச் சேர்ந்த சில அமைச்சர்களும் நிர்வாகிகளும் முதலமைச்சர் விஜய்யைத்தான் பிரதமர் வேட்பாளராகப் பிரச்சாரம் செய்து வருவது ஏற்புடையதல்ல என்று சுட்டிக்காட்டியுள்ளார். ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்கத் தவெக உடன்படவில்லை என்றால், தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரு காங்கிரஸ் அமைச்சர்களும் தங்களது பதவிகளைப் ராஜினாமா செய்துவிட்டு வெளியேறுவோம் என அதிரடியாக எச்சரித்துள்ளார்.
பிரதமர் விருப்பமும் தேசிய அளவிலான ஆதரவும்:
தவெக மற்றும் காங்கிரஸ் இடையிலான இந்த மோதல் குறித்து மூத்த பத்திரிகையாளர் பிரியன் அளிக்கையில், தவெக இதுவரை இந்தியா கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். இதனிடையே, சமீபத்தில் வெளியான தேசிய அளவிலான கருத்துக்கணிப்பு ஒன்றில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்திக்கு அடுத்தபடியாக 9.2 சதவீத ஆதரவுடன் விஜய் பிரதமர் வேட்பாளருக்கான விருப்பப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது தவெகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, தவெக நிர்வாகிகள் “விஜய்தான் அடுத்த பிரதமர்” என்று தீவிரமாகக் குரல் கொடுத்து வருவது, காங்கிரஸ் கட்சிக்கு மாபெரும் அரசியல் சங்கடத்தை உருவாக்கியுள்ளது.
இதையும் படிக்க: “ஜெயலலிதாவே சவால்களைச் சந்தித்தார்”.. முதல்வர் விஜய்க்கு ஆர்.எஸ். பாரதி சவால்.. வார்த்தைக்கு வார்த்தை வெடித்த சர்ச்சை!!
கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற்றம்?
ஏற்கனவே காங்கிரஸ் மூத்த தலைவர் மாணிக்கம் தாகூர், ராகுல் காந்தியின் ஆதரவால்தான் தவெக ஆட்சியைத் தக்கவைக்க முடிந்தது எனக் குறிப்பிட்டதற்குப் பதிலடியாகப் பல விவாதங்கள் எழுந்தன. தற்போது நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் 5 முதல் 6 தொகுதிகளில் தவெக தனித்து நின்று பெரும்பான்மையைப் பெற்றுவிட்டால், அதுவரை காத்திருக்காமல் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைத் தவெக கழற்றிவிடவும் வாய்ப்புள்ளது என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். இதனால் 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே தவெக – காங்கிரஸ் கூட்டணி பிளவைச் சந்திக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது.