ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்… ஏற்காவிட்டால் அமைச்சரவையை விட்டு வெளியேறுவோம்… அமைச்சர் பரபரப்பு கருத்து
Ministers Threaten to Quit : தமிழக சுற்றுலாதுறை அமைச்சர் ராஜேஷ் குமார், தவெக ராகுல் காந்தியை பிரதமரா ஏற்காவிட்டால் 2 அமைச்சர்களும் பொறுப்புகளை துறப்போம் என பேசியுள்ளார். தமிழக அமைச்சர்கள் முதல்வர் விஜய் தான் அடுத்த பிரதமராக வருவார் என பேசி வந்தனர்.
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என செய்தி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தமிழக முதல்வர் விஜய்க்கு 3வது இடம் கிடைத்தது. இதனயடுத்து அவர் அடுத்த பிரதமர் என தவெகவினர் பேசி வந்தனர். தவெக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தி தான் தங்களது பிரதமர் என பேசி வந்த நிலையில் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழக சுற்றுலாதுறை அமைச்சர் ராஜேஷ் குமார், தவெக ராகுல் காந்தியை பிரதமரா ஏற்காவிட்டால் 2 அமைச்சர்களும் பொறுப்புகளை துறப்போம் என பேசியுள்ளார்.
‘ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்’
இதையும் படிக்க : இயற்கை உதவியுடன் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் தமிழக கிராமம் – உலகுக்கே முன்னோடி!
கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜேஷ்குமார், வருகிற 2029 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலில் பாரத பிரதமர் வேட்பாளர் எங்களுடைய தலைவர் ராகுல்காந்தி தான். ஒருவேளை தமிழக வெற்றிக் கழகம் அதற்கு உடன்படவில்லை என்றால், தமிழக வெற்றி கழக அமைச்சரவையில் இருக்கும் இரண்டு அமைச்சர்களும் எங்கள் பொறுப்புகளை துறப்போம் என்றார்.




அடுத்த பிரதமர் முதல்வர் விஜய் தான் என சமூக வலைதளங்களில் பேசப்படும் நிலையில் காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து விளக்கமளித்துள்ளார். அப்போது பேசிய அவர், காங்கிரசை பொருத்தவரையில், ராகுல் காந்திதான், 2029 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்.
இதையும் படிக்க : மதுரையில் 1000 கோடி மோசடி… திணறும் போலீஸ்… சதுரங்க வேட்டையை மிஞ்சிய சம்பவம்
கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் வெறுப்பில் இருக்கின்றனர். மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மோடி அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். வருகிற 2029 ஆம் ஆண்டு ராகுல் காந்திதான் பிரதமர். அவர் பிரதமராவதற்கு நாங்கள் அனைவரும் ஒத்த குரலில் பணியாற்றுவோம் என்றார்.
திருப்பூரில் தவெகவின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நான் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருடன் பயணித்திருக்கிறேன். இவ்விரு தலைவர்களுக்குப் பிறகு, அவர்களின் வழியில் தமிழ்நாட்டை மட்டுமல்ல, எதிர்கால இந்தியாவையே ஆளுகிற சக்திதான் விஜய். வட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் கூட விஜய்யைப் போன்ற ஒரு தலைவர் தங்களுக்குக் கிடைக்க மாட்டாரா என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் என்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கிடையில் முதல்வர் விஜய் பிரதமர் வேட்பாளருக்கு பொருத்தமானவர் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், முதல்வர் விஜய் பிரதமர் வேட்பாளருக்கு பொருத்தமானவர் அல்ல. அவர் தமிழ்நாட்டிற்கு ஏற்றவர் என்றார்.