ரேசன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை – வெளியான தகவல்
Onions at Ration Shops : நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பல இடங்களில் கிட்டத்தட்ட வெங்காயத்தின் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளது. இதனையடுத்து மத்திய அரசிடம் இருந்து வெங்காயம் பெறப்பட்டு ரேசன் கடைகளின் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்கப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
சென்னை, ஆகஸ்ட் 30 : நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பல இடங்களில் கிட்டத்தட்ட வெங்காயத்தின் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக பெரிய வெங்காயத்தின் விலை ரூ.30 அதிகரித்து ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.50 என்ற அளவில் விற்கப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது ரூ.70 ஆக விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரேசன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை
தமிழ்நாட்டில் அதிக அளவில் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் அதிக அளவில் சமையலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. மேலும் தமிழ்நாடு ஹோட்டல்களில் பிரியாணி முதல் ஆம்லேட் வரை பல்வேறு உணவுகளுக்கு வெங்காயம் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. இந்த நிலையில் வெங்காயத்தின் விலை உயர்வால் ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க : காவிரி விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி பிரமாணப் பத்திரம்.. விநாடிக்கு 22,000 கனஅடி நீர் திறக்க வலியுறுத்தல்!




பொதுவாக மார்கெட்களில் காய்கறிகளின் விலை உயரும் போது பொதுமக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் ரேசன் கடைகளில் குறைந்த விலையில் விற்கப்படும். அந்த வகையில் ரேசன் கடைகளில் குறைந்த விலைக்கு வெங்காயம் விற்க கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக குறைந்த விலையில் வெங்காயம் விற்க கூட்டுறவுத்துறைக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும், தற்போது இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம் கூடுதலாக வெங்காயம் கேட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து மத்திய அரசு வழங்கியதும் தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் வெங்காயம் விற்கப்படும் என்றும், ஒரு கிலோ வெங்காயம் ரூ.30 முதல் ரூ.40க்கு விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : “ஜெயலலிதாவே சவால்களைச் சந்தித்தார்”.. முதல்வர் விஜய்க்கு ஆர்.எஸ். பாரதி சவால்.. வார்த்தைக்கு வார்த்தை வெடித்த சர்ச்சை!!
மேலும் வெங்காய விலையை உயர்வை கருத்தில் கொண்டு மத்திய அரசு சார்பில் வெங்காயம் கிலோ ரூ.35க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு ஆகியவற்றின் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வாகனங்கள் மூலமும், சஃபல் மற்றும் கேந்திரிய பந்தர் விற்பனை நிலையங்கள் மூலமும் விற்பனை நடைபெறும்.
இதேபோல், உற்பத்தி பகுதிகளில் இருந்து நுகர்வு மையங்களுக்கு வெங்காயத்தை விரைவாக கொண்டு செல்லும் ‘கந்தா எக்ஸ்பிரஸ்’ திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து விரைவில் தமிழ்நாட்டில் ரேசன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.