AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“தவெக ஆட்சி அமைந்தது ஒரு விபத்து.. 5 ஆண்டுகள் நீடிக்காது!”.. இபிஎஸ் சரமாரி விமர்சனம்!!

TVK Governance is an Accident: தருமபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக்கழகத்தின் ஆட்சியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக ஆட்சி அமைந்தது ஒரு எதிர்பாராத விபத்து என்றும், இந்த அரசு ஐந்து ஆண்டுகள் நீடிக்காது என்றும் கூறிய அவர், அரசின் கடன் சுமையால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

“தவெக ஆட்சி அமைந்தது ஒரு விபத்து.. 5 ஆண்டுகள் நீடிக்காது!”.. இபிஎஸ் சரமாரி விமர்சனம்!!
எடப்பாடி பழனிசாமி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 30 Aug 2026 11:35 AM IST

தருமபுரி, ஆகஸ்ட் 30: தமிழக அரசியலில் முன்னணி கட்சிகளுக்கு இடையேயான அரசியல் மோதல்களும் விமர்சனங்களும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. அந்த வகையில், தருமபுரி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் அதன் தலைமை குறித்து இதுவரை இல்லாத வகையில் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தவெக ஆட்சிக்கு வந்தது ஒரு எதிர்பாராத விபத்து என கூறிய அவர், இந்த அரசாங்கத்திடம் முறையான கொள்கைகளோ அல்லது நிர்வாகத் திட்டங்களோ எதுவுமில்லை என்றும் சாடினார்.

இதையும் படிக்க: முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வாபஸ்.. எஸ்கார்ட் பாதுகாப்பாக குறைத்து நடவடிக்கை!

100 நாட்களில் ரூ.28,000 கோடி வரை கடன்:

உரையின் போது தவெக அரசின் நிதியியல் மேலாண்மை குறித்து சரமாரியாகக் குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் 100 நாட்களிலேயே சுமார் 28,000 கோடி ரூபாய் வரை கடன் வாங்கியிருப்பதாகச் சுட்டிக்காட்டினார். மேலும், இந்த நிதியாண்டில் மட்டும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கினால் மட்டுமே அரசாங்கத்தை நடத்த முடியும் என்ற அவலநிலை உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார். இத்தகைய தொடர் கடன்களால், ஐந்து ஆண்டுகள் முடிவதற்குள் மாநிலத்தின் கடன் சுமை 10 லட்சம் கோடி முதல் 20 லட்சம் கோடி ரூபாய் வரை உயர்ந்துவிடும் என்றும், இறுதியில் இந்த கடன் சுமையை மக்கள் தலையில்தான் ஆட்சியாளர்கள் சுமத்துகிறார்கள் என்றும் ஆவேசமாகப் பேசினார்.

3 அமைச்சர்கள் மட்டுமே பதிலளிப்பதாக விமர்சனம்:

அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் அமைச்சர்களின் பதில்கள் குறித்தும் தனது உரையில் கேள்விகளை எழுப்பிய அவர், தவெக ஆட்சியில் எந்தக் கேள்வி கேட்டாலும் குறிப்பிட்ட 3 அமைச்சர்கள் மட்டுமே முன்னின்று பதிலளிப்பதாகக் விமர்சித்தார். அமைச்சரவையில் பல அனுபவமிக்க மூத்த தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதிலும், துறை சார்ந்த அனுபவம் இல்லாதவர்கள் பேசுவது போலவும், கேட்கப்படும் கேள்விகளுக்கு சம்பந்தமே இல்லாத பதில்களை அளிப்பது போலவும் தற்போதைய அமைச்சர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன என்று குற்றம்சாட்டினார்.

இதையும் படிக்க : “கோயிலுக்கும் திமுகவினருக்கும் என்ன சம்பந்தம்?”.. அறங்காவலர் குழு நியமனம் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பளார்!

ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கப்போவதில்லை:

மேலும், மாநிலத்தில் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பொதுமக்களின் அன்றாடப் பிரச்சனைகள் குறித்து சட்டமன்றத்திலோ அல்லது வெளியிலோ கேள்விகள் கேட்கப்பட்டால், அதற்கு நேரடியான பதில்களை அளிக்காமல் ஆட்சியாளர்கள் மழுப்பி வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஐந்து ஆண்டுகள் முழுமையாக இந்த ஆட்சி நீடிக்கப் போவதில்லை என்று குறிப்பிட்ட அவர், அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களையும், அனுபவமிக்க நிர்வாக முறையையும் சுட்டிக்காட்டி தனது உரையை நிறைவு செய்தார்.

Follow Us