மண்ணுக்குள் கேட்ட அழுகுரல்.. நேபாள் வெள்ளத்தில் சிக்கி 3 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 6 வயது சிறுமி!
6 Years Old Girl Rescued From Nepal Flood After | நேபாள் பெரு வெள்ளத்தில் சிக்கி 700-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 3,000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இந்த நிலையில், 3 நாட்களுக்கு பிறகு 6 வயது சிறுமி ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
குஷிநகர், ஆகஸ்ட் 31 : நேபாள் பெரு வெள்ளத்தில் (Nepal Flash Flood) சிக்கி ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், உடல்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், உத்தர பிரதேச (UP – Uttar Pradesh) ஆற்றில் இதுவரை 13 உடல்கள் மீட்கப்பட்டுள்ள கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல, நேபாளில் மூன்று நாட்களுக்கு பிறகு 6 வயது சிறுமி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நேபாள வெள்ள விபத்தின் மீட்பு பணிகள் எந்த நிலையில் உள்ள, உடல்கள் உத்தர பிரதேச ஆற்றுக்கு வந்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மூன்று நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 6 வயது சிறுமி
நேபாளின் காத்மாண்டு பகுதியில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் ரசுவா மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள கோஷி ஆற்றில் பணிப்பாறை உடைந்து விழுந்ததன் காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் அந்த பகுதியில் இருந்த வீடுகள் மற்றும் பொதுமக்கள் அடித்துச் செல்லப்பட்டன. குறிப்பாக நூற்றுக்கணக்கான மக்கள் பலியான நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயினர்.
இதையும் படிங்க : நேபாள வெள்ளத்தில் சிக்கிய 290 இந்தியர்கள்; தமிழகத்தைச் சேர்ந்த 86 பேர் மாயம்




உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பது, காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 6 வயது சிறுமி ஒருவர் சுமார் மூன்று நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். சேற்றுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அந்த சிறுமியை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மண்ணுக்கு அடியில் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்ட நிலையில், அவர்கள் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு சிறுமியை காப்பாற்றியுள்ளனர்.
உபி ஆற்றில் மீட்கப்பட்ட 13 உடல்கள்
கோஷி ஆற்றின் வெள்ளம் இந்தியாவுக்குள்ளும் வந்துள்ளது. இதன் காரணமாக சில உடல்கள் நேபாளில் இருந்து இந்தியாவுக்கு அடித்து வரப்பட்டுள்ளன. அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம், குஷிநகர் மாவட்டத்தில் உள்ள கந்தக் ஆற்றில் இருந்து நேற்று (ஆகஸ்ட் 30, 2026) மட்டும் 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : இது வெறும் நிவாரணம் இல்ல… நேபாள மக்களுக்கு இந்தியா அனுப்பிய பெட்டிகளில் எழுதப்பட்டிருந்த நெகிழ்ச்சியான வாசகம்!
இதுவரை அந்த ஆற்றில் இருந்து 13 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உத்தர பிரதேச பேரிடர் மீட்பு படையினர், அந்த ஆற்றில் மீட்பு பணியில் ஈடுபட்டபோது இந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.