திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் விலகல்
Thoppu Venkatachalam Resigns From DMK: திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் திடீரென விலகியுள்ளார். ஈரோடு மத்திய மாவட்டப் பொறுப்பாளர் பதவி அண்மையில் பறிக்கப்பட்டதால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவரே செய்தியாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு, ஆகஸ்ட் 31: தமிழக அரசியல் களத்தில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பல்வேறு கட்சிகளிலும் உள்சச்சரவுகளும் நிர்வாகிகள் மாற்றமும் தீவிரமடைந்து வருகின்றன. குறிப்பாக, கொங்கு மண்டல அரசியலில் முக்கிய செல்வாக்கு பெற்ற தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், திமுகவில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகக் கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் மாவட்டப் பொறுப்பு மாற்றங்கள் காரணமாக இத்தகைய அதிரடி முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க: “ராகுலா.. விஜய்யா?”.. பிளவுபடும் தவெக கூட்டணி.. ராஜினாமா எச்சரிக்கையால் கிளம்பிய புதுப் புயல்!!
பதவி பறிப்பும் உருவான மனக்கசப்பும்:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம், திமுகவில் ஈரோடு மத்திய மாவட்டப் பொறுப்பாளராகச் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக திமுக மேலிடம் அவரிடமிருந்த மாவட்டப் பொறுப்பாளர் பதவியைப் பறித்தது. கட்சிப் பதவி பறிக்கப்பட்டதிலிருந்தே தோப்பு வெங்கடாச்சலம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியும் மனக்கசப்பும் நிலவி வந்தது.
பத்திரிகையாளர் சந்திப்பும், அறிவிப்பும்:
மாவட்டப் பொறுப்பு பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரோடு பெருந்துறையில் இன்று காலை தோப்பு வெங்கடாச்சலம் அவசரமாகச் செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தன்னை முழுவதுமாக விடுவித்துக் கொள்வதாகத் தெரிவித்து, ராஜினாமா கடிதத்தை அவர் வெளியிட்டார். கட்சி மேலிடத்தின் நடவடிக்கையால் அதிருப்தியில் இருந்தவர், தற்போது முறைப்படி திமுகவிலிருந்து முற்றிலுமாக விலகியுள்ளார்.
இதையும் படிக்க: ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்… ஏற்காவிட்டால் அமைச்சரவையை விட்டு வெளியேறுவோம்… அமைச்சர் பரபரப்பு கருத்து
அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன?
செய்தியாளர் சந்திப்பின் போது, திமுகவிலிருந்து விலகிய நிலையில் வேறு ஏதேனும் அரசியல் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதா எனப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த தோப்பு வெங்கடாச்சலம், “தற்போது வரை வேறு எந்தக் கட்சியிலும் இணைவது குறித்து எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை; தற்போதைக்கு திமுகவில் இருந்து மட்டுமே வெளியேறியுள்ளேன்” எனத் தெளிவுபடுத்தினார். கொங்கு மண்டல அரசியலில் முக்கியக் காரணியாக விளங்கும் முன்னாள் அமைச்சர் ஒருவர் திமுகவில் இருந்து விலகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.