இந்திய உயர்கல்வியில் மிகப்பெரிய வளர்ச்சி – 10 ஆண்டுகளில் முக்கிய மாற்றங்கள்
இந்தியாவில் உள்ள கல்வி முறையானது, அனைவருக்கும் உள்ளடக்கிய மற்றும் சமமான தரமான கல்வியை உறுதி செய்வதையும், வாழ்நாள் முழுவதும் கற்கும் வாய்ப்புகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கல்வி அமைச்சகம் இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் குறித்து ஆண்டுதோறும் ஒரு கணக்கெடுப்பையும் நடத்துகிறது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் All India Survey on Higher Education (AISHE) தரவுகளின்படி, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உயர்கல்வித் துறை குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ன் கீழ் அனைவருக்கும் தரமான, சமமான மற்றும் உள்ளடக்கிய கல்வியை வழங்கும் நோக்கில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக PIB தெரிவித்துள்ளது
AISHE கணக்கெடுப்பு என்றால் என்ன?
அகில இந்திய உயர்கல்வி ஆய்வு (AISHE) என்பது மத்திய கல்வி அமைச்சகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு ஆராய்ச்சிக் கணக்கெடுப்பாகும். நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களிடமிருந்து (HEIs) துல்லியமான தரவுகளைச் சேகரித்து பகுப்பாய்வு செய்வதற்காக இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ் உள்ள கல்வி சீர்திருத்தங்கள் நாட்டில் எவ்வளவு திறம்பட செயல்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கணக்கெடுப்பு உதவுகிறது. மேலும், பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள உயர்கல்வித் துறையின் குறைபாடுகளைக் கண்டறிந்து, தேவையான மாற்றங்களைச் செய்வதற்கும் இந்தக் கணக்கெடுப்புத் தரவுகள் அதிகாரிகளுக்கு உதவுகின்றன.
கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிர்காலக் கல்விக் கொள்கைகளை வகுப்பதற்கும், மிகவும் தேவைப்படும் மாணவர்களுக்கு மானியங்களையும் நிதிகளையும் விநியோகிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும். முழுமையான எழுத்தறிவுடன், உயர்கல்வித் துறையில் உலகத் தரத்திற்கு இணையாக இந்தியக் கல்வித் துறையை உயர்த்துவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
உயர்கல்வி வளர்ச்சி குறித்த AISHE அறிக்கை
- பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 2014-15ல் 760 ஆக இருந்து, 2023-24க்குள் 1,289 ஆக உயர்ந்துள்ளது, இது 69.6 சதவிகித அதிகரிப்பாகும்.
- கல்லூரிகளின் எண்ணிக்கை 2014-15 ஆம் ஆண்டில் 38,498 ஆக இருந்து, 2023-24 ஆம் ஆண்டில் 48,246 ஆக உயர்ந்துள்ளது, இது 25.3 சதவிகித அதிகரிப்பாகும்.
- மற்ற நிறுவனங்களையும் கணக்கில் கொண்டால், அவற்றின் எண்ணிக்கை 2014-15ல் 12,276லிருந்து 2023-24க்குள் 15,221 ஆக அதிகரித்துள்ளது. இது 24.0 சதவிகித அதிகரிப்பாகும். கடந்த பத்து ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 69.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
- இது உயர்கல்வித் துறைக்கு அதிக மாணவர்களை ஈர்ப்பதற்கும் உதவியுள்ளது. இந்த விரிவாக்கம், நாட்டின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உயர்கல்வியை எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளது.