இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8% ஆக உயர்வு! – GDP ரூ.81.36 லட்சம் கோடி
புதிய தேசிய கணக்குப் புள்ளிவிவரத் தொடரில், உற்பத்தித் துறையின் மொத்த மதிப்பு கூட்டலை (GVA) மதிப்பிடுவதற்காக ‘Double Deflation’ என்ற முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் இடைநிலை நுகர்வு ஆகியவற்றின் விலை மாற்றங்கள் தனித்தனியாகக் கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில் உண்மையான மதிப்பு கூட்டல் கணக்கிடப்படுகிறது என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 31, 2026: 2026-27ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான (ஏப்ரல் – ஜூன்) மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பீடுகளை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) வெளியிட்டுள்ளது. அதன்படி, 2026-27ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிலையான விலையில் (Real GDP) இந்தியாவின் GDP ரூ.81.36 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் GDP ரூ.75.46 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது 7.8 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது.
அதேபோல், நடப்பு விலையில் 2026-27ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் GDP ரூ.88.27 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இது ரூ.80 லட்சம் கோடியாக இருந்தது. இதன் மூலம் 10.3 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது.
மொத்த மதிப்பு கூட்டல் வளர்ச்சி 8.2%:
Estimated growth of real GDP in Q1 of FY 2026–27 is 7.8%.
Nominal GDP in Q1 of FY 2026–27 is estimated to have grown by 10.3%, while Real GVA has recorded growth of 8.2%.
The credit for this strong performance goes to the people of India and their hard work.
Reforms undertaken…— Nirmala Sitharaman (@nsitharaman) August 31, 2026
மொத்த மதிப்பு கூட்டல் (GVA) அடிப்படையில், 2026-27ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிலையான விலையில் Real GVA ரூ.73.82 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.68.21 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது 8.2 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
நடப்பு விலையில் Nominal GVA ரூ.80.53 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.72.24 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 11.5 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது.
தொழில் துறைகளில் வளர்ச்சி:
2026-27ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் பல்வேறு முக்கியத் துறைகளில் வளர்ச்சி பதிவாகியுள்ளது. குறிப்பாக, மின்சார உற்பத்தி குறியீடு 9.3 சதவீதமும், சிமெண்ட் உற்பத்தி 8.9 சதவீதமும், முடிக்கப்பட்ட எஃகு பயன்பாடு 8.3 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளன.
வணிக வாகனங்களின் விற்பனை 18.3 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை 29.7 சதவீதமும் அதிகரித்துள்ளது. மூலதனப் பொருட்கள் உற்பத்தி குறியீடு 15.2 சதவீத வளர்ச்சியையும், மின்சார உபகரணங்கள் உற்பத்தி 27 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன.
ஏற்றுமதி 25.8 சதவீதமும், இறக்குமதி 30.5 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளன. இயந்திர உபகரணங்களின் இறக்குமதி 51.5 சதவீதமும், போக்குவரத்து உபகரணங்களின் ஏற்றுமதி 52.2 சதவீதமும் அதிகரித்துள்ளன.
புதிய அடிப்படை ஆண்டு:
2022-23ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்ட புதிய தொடர் ஆண்டு மற்றும் காலாண்டு GDP மதிப்பீடுகளை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, 2025-26ஆம் நிதியாண்டுக்கான GDP-யின் தற்காலிக மதிப்பீடுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்பட்டன.
புதிய தேசிய கணக்குப் புள்ளிவிவரத் தொடரில், உற்பத்தித் துறையின் மொத்த மதிப்பு கூட்டலை (GVA) மதிப்பிடுவதற்காக ‘Double Deflation’ என்ற முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் இடைநிலை நுகர்வு ஆகியவற்றின் விலை மாற்றங்கள் தனித்தனியாகக் கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில் உண்மையான மதிப்பு கூட்டல் கணக்கிடப்படுகிறது என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், புதிய உற்பத்தியாளர் விலை குறியீடு (PPI), தொழில்துறை உற்பத்திக் குறியீடு (IIP) மற்றும் பல்வேறு நிர்வாகத் தரவுகள் ஆகியவை இந்த GDP மதிப்பீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த GDP மதிப்பீடு எப்போது?
2026-27ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டான ஜூலை – செப்டம்பர் காலத்திற்கான GDP மதிப்பீடுகள் நவம்பர் 30, 2026 அன்று வெளியிடப்படும் என மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தரவுகள் மற்றும் ஆதார நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் திருத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் GDP மதிப்பீடுகளில் எதிர்காலத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.