கூட்டணியைப் பிரிக்கச் சதியா?.. “போலி கருத்துக்கணிப்புகள் பிரித்தாளும் ஆயுதம்”.. நரி கதை சொன்ன மாணிக்கம் தாகூர் எம்பி!
Manickam Tagore Kutty Story: 2029 பிரதமர் வேட்பாளர் தொடர்பான கருத்துக்கணிப்புகள் வெளியாகி அரசியல் களத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் 'நரியின் போலி கருத்துக்கணிப்பு' என்ற குட்டிக்கதையைப் பகிர்ந்துள்ளார். போலி சர்வேக்கள் கூட்டணியைப் பிரிக்கும் ஆயுதம் என எச்சரிக்கும் அவரது பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 31: தமிழக அரசியலில் 2029 நாடாளுமன்றத் தேர்தலின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி, தவெக மற்றும் அக்கட்சியுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் இடையே பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளன. குறிப்பாகத் தவெக தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் நகர்வுகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் உலா வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான மாணிக்கம் தாகூர் தனது சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த ‘நரியின் போலி கருத்துக்கணிப்பு’ எனும் குட்டிக்கதை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதையும் படிக்க: “ராகுலா.. விஜய்யா?”.. பிளவுபடும் தவெக கூட்டணி.. ராஜினாமா எச்சரிக்கையால் கிளம்பிய புதுப் புயல்!!
போலி கருத்துக்கணிப்பும் சிங்கம் – யானையின் நட்பும்:
படித்ததில் பிடித்த ஒரு குட்டி கதை …
நரியின் போலி கருத்துக்கணிப்பு
ஒரு காட்டில் சிங்கமும் யானையும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.
காட்டில் எந்தப் பெரிய முடிவாக இருந்தாலும், இருவரும் ஒன்றாக ஆலோசனை செய்வார்கள்.ஒருநாள், அந்த நட்பைப் பார்த்து பொறாமைப்பட்ட நரி, ஒரு…
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) August 30, 2026
இதுகுறித்து மாணிக்கம் தாகூர் தனது பதிவில், காட்டில் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் சிங்கத்திற்கும் யானைக்கும் இடையே பிளவை உண்டாக்க நரி ஒன்று போலி கருத்துக்கணிப்பைத் தயாரிக்கும் கதையைக் குறிப்பிட்டுள்ளார். “காட்டில் யானைக்கு ஆதரவில்லை, சிங்கத்தின் மீதே நம்பிக்கை உள்ளது; எண்களே பேசுகின்றன” என நரி பரப்பும் பொய்யான தகவலால் சிங்கமும் யானையும் ஒருவரை ஒருவர் சந்தேகிக்கத் தொடங்கித் தங்களது நட்பை விலக்கிக் கொள்கின்றன. இரு துருவங்கள் பிரியும் போதுதான் தனது அரசியல் செல்வாக்கு உயரும் என்ற நரியின் தந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த உவமை அமைக்கப்பட்டிருந்தது.
வெட்டவெளிச்சமான உண்மை:
தொடர்ந்து அந்தப் போலிக் கருத்துக்கணிப்பின் பின்னணியை வயதான ஆந்தை ஒன்று கேள்வி எழுப்பி வெளிக்கொண்டு வருகிறது. “எத்தனை விலங்குகளிடம் கேட்கப்பட்டது? எந்தப் பகுதியில் சர்வே நடத்தப்பட்டது? முடிவுகள் எப்படிப் பெறப்பட்டன?” என்ற ஆந்தையின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் நரி திணறுகிறது. இதன்மூலம், அது மக்களின் உண்மையான கருத்து அல்ல; ஒரு குறிப்பிட்ட கருத்தை உருவாக்குவதற்காகத் தயாரிக்கப்பட்ட கதை என்பதைச் சிங்கமும் யானையும் புரிந்து கொண்டு, மூன்றாம் நபரின் பேச்சை நம்பாமல் நேரடியாகப் பேசிக் கொள்ள முடிவெடுக்கின்றன.
இதையும் படிக்க: ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்… ஏற்காவிட்டால் அமைச்சரவையை விட்டு வெளியேறுவோம்… அமைச்சர் பரபரப்பு கருத்து
கருத்துக்கணிப்புகளின் பின்னணி:
இந்தக் குட்டிக்கதையின் முடிவில், “ஒவ்வொரு எண்ணும் உண்மையைச் சொல்லாது; ஒவ்வொரு சர்வேயும் மக்களின் குரல் அல்ல. சில நேரங்களில் மக்களின் குரல் என்று காட்டப்படும் எண்கள், மக்களைப் பிரிப்பதற்காக உருவாக்கப்படும் ஆயுதங்கள்” என்ற நீதியையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் வெளியான பிரதமர் வேட்பாளருக்கான கருத்துக்கணிப்பு மற்றும் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் அரசியல் நகர்வுகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே மாணிக்கம் தாகூரின் இந்த ‘நரி கதை’ அமைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.