800 அடி பள்ளம்.. உருண்டு விழுந்த வேன்.. 9 பேர் பலியான பெரும் சோகம்.. வால்பாறை விபத்து நடந்தது எப்படி.. நேரில் பார்த்தவர்கள் கூறுவதென்ன?
Valparai Accident: கேரள மாநிலத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் சுற்றுலா வந்த வேன் வால்பாறையில் கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது, விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியது என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கேரள மாநிலம், மணப்புரம் பெருந்தல் மன்னா அருகே உள்ள பாங் என்ற பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், அந்தப் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது குழந்தைகள் ஆகியோருடன் சேர்ந்து வால்பாறைக்கு ஒரு வேனில் சுற்றுலா சென்றனர். அந்த வேனில் 8 பெண்கள், 5 ஆண்கள், சிறுமிகள், வேன் ஓட்டுநர் உள்பட மொத்தம் 15 பேர் வரை பயணம் செய்தனர். இவர்கள் திருச்சூர் வழியாக சாலக்குடி அதிரப்பள்ளிக்கு சென்றனர். அப்போது, அதிரப்பள்ளியில் இருந்து மழுக்குப்பாறை வழியாக வால்பாறைக்கு வழியாக சென்று, அங்கிருந்து, பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக ஊர் திரும்புவதற்கு திட்டமிட்டு இருந்தனர். அப்போது, வால்பாறையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளை வேன் கடந்து வந்து கொண்டிருந்தது. 13- ஆவது கொண்டை ஊசி வளைவை வேன் கடந்த போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை வேன் இழந்தது.
9- ஆவது கொண்டை ஊசி வளைவில் உருண்டு விழுந்தது
இதனால், வேன் சாலையில் இருந்து விலகி 9- ஆவது கொண்டை ஊசி வளைவை நோக்கி சுமார் 800 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இதனால், வேனில் இருந்த சுற்றுலா பயணிகள் அச்சத்தில் அலறல் சத்தம் போட்டனர். அந்த வழியாக வந்தவர்கள் விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீசார், பொதுமக்கள், தீயணைப்பு மீட்பு பணிகள் வீரர்கள் ஆகியோர் இணைந்து பள்ளத்தாக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி.. பட்டாசு வெடித்து கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்.




பெண்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
இதில், பள்ளியின் தலைமை ஆசிரியை அஜிதா (54 வயது), ரம்லா (52), ஜூஹ்ரா (43), ஆசிரியை ஆஷா (41), மஜீத் (43), சஜிதா (45), ஆசிரியை ஷகிலா (37), ருகியா (39), ஹிஷாம் (12) ஆகிய 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களது சடலங்கள் அனைத்தும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலமாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்தில் பலத்த காயமடைந்த ஒரு சிறுமி உள்பட 4 பேர் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
வேன் பிரேக்கில் தொழில்நுட்ப கோளாறு
அந்த வேனின் பிரேக்கில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், எனது வாகனத்திற்கு முன்னாள் சென்று கொண்டிருந்த இந்த வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது. இதுதொடர்பாக போலீசருக்கு தகவல் தெரிவித்தேன். அத்துடன், அந்தப் பகுதியில் இருந்தவர்கள் கொண்டை ஊசி வளைவில் சிக்கியிருந்த நபர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: கோடை வெயில் சுட்டெரிக்கும்.. இங்கெல்லாம் மழைக்கும் வாய்ப்பு.. வானிலை ரிப்போர்ட் இதோ!!