பழிவாங்கவே லஞ்ச ஒழிப்பு சோதனை.. நான் நிரபராதி என நிரூபிப்பேன்.. எ.வ.வேலு ஆவேசம்!
Former Minister EV Velu: தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் தெரிவித்த கட்சி நிதி தொடர்பான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்ட காரணத்தால் லஞ்ச ஒழிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில், நான் நிரபராதி என நிரூபிப்பேன் என்று எ.வ. வேலு தெரிவித்தார்.
தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்கள் உள்ளிட்ட 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது. இதில், எ.வ.வேலு தொடர்புடை இடங்களில் ரூ.40 லட்சம் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக எ.வ. வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவையில் திமுக பார்ட்டி ஃபண்ட் தொடர்பாக முதல்வர் பேசியதற்கு ஆதாரம் கேட்கப்பட்டதன் அடிப்படையில் இந்த பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனது சொந்த கிராமமான சே. கூடலூரில் சொந்த வீடு அமைந்துள்ளது. இங்கும் திருவண்ணாமலையில் கல்லூரி நடைபெறும் இடத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். மாணவர்கள் கல்வி கற்கக்கூடிய இடத்தில் காலை முதல் மாலை வரை சோதனை நடத்தியுள்ளனர். இதனால், மாணவர்களின் மனநிலை பெருமளவு பாதிக்கப்பட்டு இருக்கும்.
நீதிமன்றத்தில் நிரபராதி என நிரூபிப்பேன்
இவை எல்லாம் நாங்கள் பயந்து விடுவோம் என்பதற்காகவே செய்கிறனர். மிசா சட்டத்தை பார்த்த திராவிட கழகம் எதற்கும் பயப்படாது. நீதிமன்றம் என்ற ஒன்று இருக்கிறது. கடைசி நம்பிக்கை நீதிமன்றம் மட்டுமே. நீதிமன்றத்தில் நான் நிரபராதி என்பதை கட்டாயம் நிரூபிப்பேன். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். எனவே, என்னை பொறுத்தவரை நான் பரிசுத்தமானவன். எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. ஒரு பொய்யை பலமுறை சொல்வதால் உண்மையாகி விட முடியாது. நான் நிரபராதி என்பதை நிரூபித்து காட்டுவேன்.
மேலும் படிக்க: தவெக அரசு உள்நோக்கத்தில் வெள்ளை அறிக்கை வெளியீடு.. செந்தில் பாலாஜி பெரும் குற்றச்சாட்டு!




ரூ.40 லட்சம் பறிமுதல் செய்ததாக கூறுவது பொய்
மிசா சட்டத்தின் கீழ் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் சிறையில் ஓராண்டு அடைக்கப்பட்டு இருந்தார். அவர் ஒரு அற்புதமான அரசியலை நடத்தி காட்டியுள்ளார். ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என்பது வடிகட்டிய பொய்யாகும். நான் அமைச்சராக இருந்தபோது அரசியல் தொடர்பான அறிக்கைகள், சுற்றுப்பயணம் குறித்த பட்டியல், ஆய்வு மேற்கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் ஒரு கம்ப்யூட்டரில் இருந்தது. இந்த கம்ப்யூட்டரில் வேறு ஏதோ இருப்பது போல அந்த கம்யூட்டரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கரூரில் அமைக்கப்பட்ட சாலை விவகாரம்
கரூரில் அமைக்கப்பட்ட சாலை தொடர்பாக ஒப்பந்ததாரருக்கு அமைச்சர் தொலைபேசி வாயிலாக பேசி உதவி செய்ததாக எஃப் ஐ ஆர் குறிப்பிடப்பட்டுள்ளது. மொழிப்போரில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளேன். தற்போதைய முதல்வர் விஜய் எந்த போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளாரா. 1984- இல் சட்டப்பேரவையில் எம்எல்ஏவாக நுழைந்துள்ளேன். நான் மூத்த உறுப்பினர். நான் ஆதாரம் கேட்டதில் என்ன தவறு உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன – லஞ்ச ஒழிப்புத்துறை