அதிமுகவில் எஸ்.பி. வேலுமணி – நத்தம் விஸ்வநாதனுக்கு முக்கிய பதவி.. எடப்பாடி அடித்த ஆர்டர்!
SP Velumani And Natham Viswanathan: அதிமுகவில் பதவி பறிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதில், எஸ். பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு துணை பொதுச்செயலர் பதவி அளித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தரப்பினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வந்தனர். அத்துடன், தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இதன் காரணமாக, எஸ். பி. வேலுமணி தலைமையிலான உறுப்பினர்களை கட்சியின் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கம் செய்திருந்தார். இதை தொடர்ந்து, எஸ். பி. வேலுமணி தரப்பினர் எடப்பாடி பழனிசாமி உடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து அவர்களுக்குள் இணக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், கட்சி பதவி பறிக்கப்பட்ட நபர்களுக்கு மீண்டும் பதவி அளித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக தலைமை நிலைய செயலாளராக லாகூர் அருணாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக துணை பொதுச்செயலர் பதவி
இதேபோல, அதிமுக துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் ஏற்கனவே கே. பி. முனுசாமி இருந்து வரும் நிலையில், தற்போது எஸ். பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு அதிமுகவின் துணை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவின் அமைப்பு செயலாளராக காமராஜ், பாலகிருஷ்ண ரெட்டி, அன்பழகன் மற்றும் வீரமணி, மருதராஜா திருத்தணி கோ. அரி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதிமுக கொள்கை பரப்பு செயலாளராக சந்திரகாசி சுப்பையா பாண்டியன் ஆகியோரும், அதிமுக இளைஞரணி செயலாளராக முன்னாள் எம்.பி. எஸ். ஆர். விஜயகுமார், இளைஞர் அணி இணை செயலாளராக தமிழழகன் சல்மான் ஜாவித், அதிமுக மருத்துவ அணி செயலாளராக சரோஜா துணை செயலாளராக நஜிருல் அமீன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
எடப்பாடி – எஸ்.பி.வேலுமணி இடையே மோதல்
அதிமுகவில் எஸ். பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான எம்எல்ஏக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும், திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமைக்க கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர் கொடி தூக்கினர். மேலும், சட்டமன்ற குழு தலைவர் பதவியையும் எஸ். பி. வேலுமணி பெற முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, தவெக அரசுக்கு ஆதரவாகவும் வாக்களித்திருந்தனர். இதனால், கடுமையாக அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி மேற்கண்டவர்களின் கட்சி பதவிகளை பறித்து உத்தரவிட்டார்.




அதிமுகவில் இருந்து விலகிய 5 எம்எல்ஏக்கள்
இதனால், அதிமுகவை சேர்ந்த இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்ததுடன் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இவர்களது வரிசையில் விஜயபாஸ்கரும் இணை இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, எஸ். பி. வேலுமணி தரப்பினர் திடீரென எடப்பாடி பழனிசாமி உடன் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதுடன், கட்சியில் இணக்கமாக செல்வதாக முடிவு எடுத்தனர். அதன்படி, தற்போது மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது.