வகுப்பறையில் அரங்கேறிய அநாகரிகம்.. மாணவர்களுக்கு ஓரின சேர்க்கை தொல்லை.. கீழ்தரமான ஆசிரியர் சிறையிலடைப்பு!
Theni Teacher Arrested : தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஓரின் சேர்க்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை அளித்ததாக அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பாகியுள்ளது.
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள கிராமத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதனுக்கு புகார் சென்றது. அதன் பேரில், மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கல்வித்துறை அதிகாரிகள் அந்த பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் அதிகாரிகள் தனித்தனியாக அழைத்து விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்
இதில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஒருவர் மீது மாணவர்கள் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில், அந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆனைமலையன்பட்டியை சேர்ந்த சாமுவேல் ( வயது 45) என்பவர் மாணவர்களை ஓரின சேர்க்கையில் ஈடுபடுமாறு வலியுறுத்தி பாலியல் தொல்லை அளித்ததாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக சின்னமனூர் காவல் நிலையத்தில் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும் படிக்க: “உள்ளுக்குள் ஊமைக்காயம் இருக்கிறது.. 2 நாட்களில் முக்கிய முடிவு”.. வைகோ அதிரடி அறிவிப்பு!!




போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது
அந்த புகாரின் பேரில், போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் சாமுவேலை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், கடந்த சில மாதங்களாக பள்ளி மாணவர்களை தவறான முறையில் ஓரின சேர்க்கையில் ஈடுபடுமாறு வற்புறுத்தியதை ஒத்துக் கொண்டார். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மாணவர்களுக்கு ஆசிரியரே தொல்லை அளித்த சம்பவம்
இந்த சம்பவம் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன் உத்தரவின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியரே ஓரினச்சேர்க்கை பாலியல் தொல்லை அளித்து வந்தது தெரிய வந்தது. தற்போது, அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதால், இது குறித்த விவரங்கள் காவல் நிலையத்தில் இருந்து கல்வித்துறைக்கு தெரிவிக்கப்படும்.
ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை
தொடர்ந்து, பாலியல் தொல்லை புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் சாமுவேலை பணியிடை நீக்கம் செய்ய துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மாணவர்களோ யாரேனும் பாலியல் தொல்லைக்கு ஆளாகினால் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.
மேலும் படிக்க: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் அதிரடி ரெய்டு.. மீண்டும் பாய்ந்தது லஞ்ச ஒழிப்புத் துறை!!