பிறந்தநாள் விழாவுக்கு அழைத்த நண்பன்.. பகையாய் முடிந்த மது விருந்து.. ரூ.3000 கடனுக்காக பறிபோன உயிர்.. சென்னையில் சோகம்!
Chennai Murder: சென்னை மாவட்டத்தில் ரூ.3 ஆயிரம் கொடுத்த கடனை திருப்பி கேட்டபோது தர மறுத்ததால் எழுந்த ஆத்திரத்தில் மது போதையில் இருந்த பெயிண்டர் தொழிலாளியை அவரது நண்பர் கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாவட்டம், காரப்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜீவா ( 27 வயது). பெயிண்டர் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 21- ஆம் தேதி தனது பிறந்த நாளையொட்டி, நண்பர் ஆனந்தராஜுடன் காரப்பாக்கம் ஓஎம்ஆர் அணுகு சாலை பகுதியில் உள்ள மதுபான கடையில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அங்கு, மது அருந்திவிட்டு இருவரும் வீடு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், மது போதையில் இருந்த இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி உள்ளனர். ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜ், ஜீவாவை கீழே தள்ளி சாலையோரம் கிடந்த பெரிய கல்லை எடுத்து அவரது தலையில் போட்டுள்ளார். இதில், பலத்த ரத்த காயம் அடைந்த ஜீவா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
கல்லால் தாக்கி பெயிண்டர் தொழிலாளி கொலை
உடனே, அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து, அவரது சடலம் பிரேத பரிசோதனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, ஜீவாவின் பெற்றோர் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: மாணவர்களுக்கு வெரி குட் நியூஸ்.. இலவச சைக்கிள்களில் புத்தம் புதிய டிசைன்.. தமிழக அரசின் அசத்தல் திட்டம்!




சேலத்தில் பதுங்கியிருந்த குற்றவாளி அதிரடி கைது
மேலும், கொலை சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்த ஆனந்தராஜை தீவிரமாக தேடி வந்தனர். இதில், அவர் அந்த பகுதியில் மறைந்திருந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில், சேலம் மாவட்டத்தில் பதுங்கி இருந்த ஆனந்தராஜை போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
ரூ.3 ஆயிரம் கடனுக்காக கொலை சம்பவம்
இதில், தன்னிடம் ஜீவா ரூ.3 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். அந்த கடன் தொகையை திருப்பித் தருமாறு அவரிடம் கேட்டு வந்தேன். ஆனால், அந்தத் தொகையை திருப்பி கொடுக்காமல் ஜீவா காலதாமதம் செய்து வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று அவரது பிறந்த நாளுக்காக மது அருந்தலாம் என்று என்னை அழைத்து சென்றார்.
போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்
அப்போதும், கடன் தொகையை திருப்பி தருமாறு அவரிடம் கூறினேன். இதில், அவர் மறுப்பு தெரிவித்ததால் எங்கள் இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கடுமையான மோதலாக மாறியது. இதில், ஜீவாவை கீழே தள்ளி கல்லால் தாக்கி கொலை செய்தேன் என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. 5 பேர் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு!