முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் அதிரடி ரெய்டு.. மீண்டும் பாய்ந்தது லஞ்ச ஒழிப்புத் துறை!!
கடந்த 2021-ஆம் ஆண்டு அமைந்த திமுக ஆட்சியில் எ.வ.வேலு பொதுப்பணித்துறை அமைச்சராகச் செயல்பட்டு வந்தார். இந்த காலகட்டத்தில் அவர் ஏதேனும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தாரா என்ற கோணத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தற்போது ஒரு புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை, ஜுன் 25: திமுகவின் முக்கியப் புள்ளியும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதலே லஞ்ச ஒழிப்புத் துறையினர் (DVAC) திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகப் பதிவு செய்யப்பட்ட புதிய வழக்கின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சோதனையை தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் அவரது இல்லத்தின் முன்பு கூடியுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.
மேலும் படிக்க: பாஜக+திமுக+அதிமுக எனும் கொள்கை புடலங்காய்.. திமுக வெளியில் வேறு உள்ளே வேறு – இந்திய கம்யூனிஸ்ட் காட்டம்..
13 இடங்களில் அதிரடி சோதனை:
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்குத் தொடர்புடைய மொத்தம் 13 இடங்களில் இந்த சோதனையானது ஒரே நேரத்தில் நிகழ்த்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லம், திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடுகள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்கள் உட்பட 13 முக்கிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஆவணங்களைச் சரிபார்த்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கின் பின்னணி என்ன?
எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துவது இது முதல் முறையல்ல. கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் உணவுத்துறை அமைச்சராக எ.வ.வேலு பொறுப்பு வகித்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.26 லட்சம் சொத்து சேர்த்ததாக 2012-ஆம் ஆண்டு அவர் மீது வழக்கு பதியப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன. எனினும், இந்த வழக்கில் இருந்து கடந்த 2015-ஆம் ஆண்டு நீதிமன்றம் மூலம் அவர் விடுவிக்கப்பட்டார்.
எ.வ.வேலு மீது புதிய வழக்கு:
கடந்த 2021-ஆம் ஆண்டு அமைந்த திமுக ஆட்சியில் எ.வ.வேலு பொதுப்பணித்துறை அமைச்சராகச் செயல்பட்டு வந்தார். இந்த காலகட்டத்தில் அவர் ஏதேனும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தாரா என்ற கோணத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தற்போது ஒரு புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளனர். அந்தப் புதிய வழக்கின் தொடர்ச்சியாகவே இன்றைய தினம் இந்த அதிரடி சோதனையானது காலை முதலே அரங்கேறி வருகிறது.
ஆவணங்கள் கைப்பற்றப்படுகிறதா?
காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சோதனையின் முதற்கட்டமாக, முக்கிய சொத்து ஆவணங்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் முழுமையான நிறைவுக்குப் பின்னரே, என்னென்ன முக்கிய ஆவணங்கள் அல்லது பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்த அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியாகும் என லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மாணவர்களுக்கு வெரி குட் நியூஸ்.. இலவச சைக்கிள்களில் புத்தம் புதிய டிசைன்.. தமிழக அரசின் அசத்தல் திட்டம்!
கடந்த ஆட்சியில் செல்வாக்குமிக்க அமைச்சராக வலம் வந்த எ.வ.வேலுவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீரென புகுந்து சோதனை நடத்தி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.