பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்… முதல்வர் விஜய் குறிப்பிட்ட அந்த வார்த்தை.. ஏன் இந்த திடீர் மாற்றம்!
CM Vijay Letter To Pm Modi: நெய்வேலி என்எல்சி பங்குகள் விற்பனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் எழுதிய கடிதத்தில் இந்திய அரசு என 7 இடங்களில் குறிப்பிட்டுள்ளார். ஏன் இந்த மாற்றம் என கேள்வியெழுந்துள்ளது.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் மத்திய அரசின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்ததை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதி இருந்தார். இந்த கடிதத்தில், மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறி வரும் தமிழக வெற்றிக் கழக அரசு, இந்த கடிதத்தில் சுமார் 7 இடங்களில் “இந்திய அரசு” என முதல்வர் ஜோசப் விஜய் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் விஜய் எழுதிய கடிதத்தில், என்எல்சி இந்தியா நிறுவனத்தில் “இந்திய அரசின்” பங்குகளை மேலும் குறைக்கும் எந்த ஒரு முடிவையும் தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியாக ஆட்சேபனை செய்கிறது. “இந்திய அரசின்” பங்குகளை மேலும் குறைப்பது, அது எவ்வளவு குறைவாக இருப்பினும், இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் பொது உடைமை தன்மைக்கு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கொள்கை எதிரி பாஜக என கூறிய முதல்வர் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றபோது, கொள்கை எதிரி பாஜக என்று ஜோசப் விஜய் தெரிவித்து இருந்தார். அது முதல் தற்போது வரை மத்திய பாஜக அரசை ஒன்றிய அரசு என்ற வார்த்தையால் சுட்டிக்காட்டி பேசி வந்தார். கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி காலத்திலும், அந்த கட்சியை சேர்ந்தவர்களும், அந்த கட்சியின் கூட்டணியில் உள்ள கட்சியினரும் மத்திய பாஜக அரசு ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: அமோனியா வாயு கசிவு உயிரிழப்பு சம்பவம்.. 3 பேர் குழு அதிரடி விசாரணை.. முதல்வரிடம் விரிவான அறிக்கை தாக்கல்!




பிரதமருக்கு எழுதிய கடிதங்களில் ஒன்றிய அரசு
தமிழகத்தின் முதல்வராக விஜய் பதவி ஏற்ற பின்னர், பிரதமர் நரேந்திர மோடிக்கு மீனவர் விடுதலை, பருத்திக்கான வரி குறைப்பு உள்ளிட்டவை தொடர்பாக எழுதிய கடிதங்களிலும், ஆளுநர் உரையிலும், ஆளுநர் உரை மீதான பதிலுரையின் போதும் ஒன்றிய அரசு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி முதல்வர் விஜய் எழுதிய கடிதத்தில் ஒன்றிய அரசு என்ற பெயரையும், மத்திய அரசு என்ற பெயரையும் பயன்படுத்தாமல் இந்திய அரசு என்ற பெயரை 7 இடங்களில் முதல்வர் விஜய் பயன்படுத்தியுள்ளார்.
மத்திய அரசுடன் தேவையற்ற மோதல் போக்கு
அண்மையில் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய் மத்திய அரசுடன் தேவையற்ற மோதல் போக்கை கடைபிடிக்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்த காரணத்தால் மத்திய அரசை ஒன்றிய அரசு என குறிப்பிடாமல் இந்திய அரசு என குறிப்பிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் தற்போது பேசும் பொருளாகி உள்ளது.
மேலும் படிக்க: வகுப்பறையில் அரங்கேறிய அநாகரிகம்.. மாணவர்களுக்கு ஓரின சேர்க்கை தொல்லை.. கீழ்தரமான ஆசிரியர் சிறையிலடைப்பு!