அதிமுகவுக்கு தொடர் சறுக்கல்.. அடுத்தடுத்து விலகும் முக்கிய தலைகள்.. பொன் ஜெயசீலன் வெளியேறினார்!
AIADMK Former MLA Pon. Jayaseelan: அதிமுகவில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறி வரும் நிலையில், கூடலூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ பொன். ஜெயசீலன் அந்தக் கட்சியில் இருந்து விலகி உள்ளார். இவர், விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அந்த கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் இந்நாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் அதிரடியாக விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதி எம்எல்ஏவான சி. விஜயபாஸ்கர், கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இவர்களை தொடர்ந்து, அதிமுகவின் முன்னாள் அமைச்சரான வைகைச் செல்வன், தான் கட்சியில் புறக்கணிக்கப்பட்டதாக கூறி அந்த கட்சியில் இருந்து விலகியதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில், கூடலூர் தொகுதியின் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவான பொன் ஜெயசீலன் தற்போது கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அடிப்படை உறுப்பினர் ஆகிய பொறுப்பில் இருந்து விலகிய ஜெயசீலன்
இதில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ள பொன் ஜெயசீலன், இது தொடர்பான விலகல் கடிதத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைத்துள்ளார். சமீபகாலமாக அதிமுகவில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வரும் நிலையில், முன்னாள் எம்எல்ஏ பொன் ஜெயசீலனின் இந்த அறிவிப்பு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் இருந்து விலகிய பொன் ஜெயசீலன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் படிக்க: 3 லட்சம் ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி.. பரிசீலனையில் 3 லட்சம் கார்டுகள்.. எப்போது வழங்கப்படும்!




அதிமுகவில் இருந்து வெளியேறிய 6 எம்எல்ஏக்கள்
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுகவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பலருக்கு எதிர்ப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, அந்த கட்சியின் எம்எல்ஏக்களாக இருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா, சி. விஜயபாஸ்கர், எம். ஆர். விஜயபாஸ்கர் ஆகிய 6 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். இதை தவிர்த்து, அவரது ஆதரவாளர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர்.
தவெகவில் ஐக்கியமாகி வரும் அதிமுகவினர்
இதில், முன்னாள் அமைச்சர் வைகை செல்வனும் அதிமுகவில் இருந்து விலகி நிலையில், விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இவர் மட்டுமின்றி முன்னாள் அமைச்சரும், மயிலம் தொகுதி எம்எல்ஏவுமான சி.வி. சண்முகம் கடும் அதிருப்தியில் இருந்து வருவதாகவும், விரைவில் அவரும் ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: கைதில் இருந்து தப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்.. ஆனால் 10 நாட்களுக்கு.. தூத்துக்குடி கோர்ட் உத்தரவு!