அதிகாலையில் பரபரப்பு.. 500 மீட்டர் சுற்றளவுக்கு திடீர் தடை.. திருவள்ளூரில் நடக்கும் முக்கிய பணி!
Ammonia Gas: திருவள்ளூரில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் 2 டன் அமோனியா வாயுவை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், தொழிற்சாலையை சுற்றி 500 மீட்டருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 2 டன் அமோனியா வாயு அகற்றப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் கடல் உணவு பதப்படுத்தும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென அமோனியா வாயு கசிய தொடங்கியது. இதில், மூச்சு திணறல், உடலில் கொப்புளங்கள் பாதிப்புடன் பலர் மயங்கி விழுந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், அமோனியா வாயுவை அதிக அளவு சுவாசித்ததன் காரணமாக தொழிலாளர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அதன்படி, தற்போது வரை 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில், பெண்களே அதிக அளவு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
2 டன் அமோனியா வாயுவை அகற்றும் பணி
இந்த நிலையில், கடல் உணவு ஏற்றுமதி ஆலையில் இருக்கும் சுமார் 2 டன் அமோனியா வாயுவை அகற்றும் பணி இன்று சனிக்கிழமை காலை தொடங்கியது. இதன் காரணமாக, இந்த ஆலையை சுற்றி 500 மீட்டர் தொலைவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த பகுதியில், எந்த பொதுமக்களும் வரக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வீடு புகுந்து தாக்கிய சம்பவம்.. அமைச்சர் மரிய வில்சனுக்கு கெடு.. நேரில் ஆஜராக புதுவை நீதிமன்றம் உத்தரவு!




அமோனியா வாயுவை ஏற்றி செல்ல 5 லாரிகள்
தற்போது, இந்த ஆலையில் எஞ்சி இருக்கும் 2 டன் அமோனியா வாயுவை அகற்றும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வீரர்கள் பல்வேறு பாதுகாப்பு கவச உடைகள் அணிந்து ஈடுபட்டு வருகின்றனர். அமோனியா வாயு அகற்றும் பணியானது தற்போது தொடங்கிய நிலையில் மாலை வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமோனியா வாயுவை வெளியேற்றுவதற்காக 5 லாரிகள் கொண்டுவரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு லாரியிலும் ஆயிரம் லிட்டர் கிலோ வாயு ஏற்றம்
இந்த லாரிகளில் அமோனியா வாயு ஏற்றப்பட்டு வேறு ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட உள்ளன. ஒவ்வொரு லாரியிலும் சுமார் 1000 லிட்டர் கிலோ அமோனியா வாயு ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட உள்ளது. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா கூறுகையில், அமோனியா வாயு அகற்றும் பணி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. ஒருவேளை தாமதம் ஏற்பட்டால் இந்த பணி நிறுத்தப்பட்டு மறுநாள் காலை தொடங்கப்படும்.
ஆபத்து கால முன்னேற்பாடுகள்
இந்த பணிகளுக்காக போலீசார், தீயணைப்பு படையினர், தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே, இந்த ஆலையில் அமோனியா வாயு கசிவு தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. எனவே, தற்போது வரை எந்த ஆபத்தும் அதனால் இல்லை. ஒரு வேளை ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: 3 லட்சம் ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி.. பரிசீலனையில் 3 லட்சம் கார்டுகள்.. எப்போது வழங்கப்படும்!